தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து ஆணவங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை
Published on

சேலம்,

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 92 ஆயிரத்து 487 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் 240 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு துணை ராணுவம் பணியில் ஈடுபடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.

புகார்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்படும் வகையில் கலெக்டர் அலுவலகத்திலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்திலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7020 என்ற எண்ணிலும், செல்போன் செயலி மூலமாகவும் ( cVIGIL ) பதிவு செய்யலாம்.

நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும், அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து அறிந்துகொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-க்கு நேரடியாக அழைத்து விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

பொது இடங்களில் அரசியல் கட்சி தொடர்பான பேனர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் புகைப்படங்கள் இடம்பெற்ற பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. மேலும் பேனர் எந்த இடத்திலும் வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோன்று தேர்தல் தொடர்பான சுவர் விளம்பரங்கள் அனைத்தும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அழிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சுவர் விளம்பரம் அழிக்கும் செலவு தொகையை அந்தந்த அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெயரில் சேர்க்கப்படும்.

தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே அரசின் சார்பில் வழங்கப்படும் எந்தவித புதிய திட்ட அறிவிப்புகளும், ஏற்கனவே அறிவித்துள்ள திட்டத்தின் சலுகைகளும் வழங்கக் கூடாது என்பதால், அதனை கண்காணித்து வருகிறோம். இதையும் மீறி வழங்கப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. இதேபோல் பள்ளிக்கூடங்கள் அருகில் பிரசாரம் செய்யக்கூடாது.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், டோக்கன், அன்பளிப்பு உள்ளிட்டவைகள் வழங்குவதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் டோக்கன் வழங்குவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு சேகரிப்பது தொடர்பாக குறுஞ்செய்திகள், சமூக வலைத்தளங்களில் பதியப்படும் கருத்துகளை கண்காணிக்க சமூக வலைதள வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி ரூ.50 ஆயிரம் வரை எடுத்து செல்லலாம். இதற்கு அதிகமான பணத்தை எடுத்து சென்றால் உரிய ஆவணங்கள் கையோடு வைத்திருக்க வேண்டும். அரசியல் கட்சியை சேர்ந்த நட்சத்திர வேட்பாளர்கள் ரூ.1 லட்சம் வரை எடுத்து செல்லலாம். ஆவணங்கள் முறையாக இல்லை என்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும். உரிய ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே திரும்ப பெற முடியும். ரூ.10 லட்சத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்து, அந்த பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். மேலும் வியாபாரிகளும் பணத்தை எடுத்து செல்லும்போது ஆவணங் களை உடன் எடுத்து செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க், மாநகர துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com