2 மாநகராட்சிகள் உள்பட 14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவம்பர் 12-ந்தேதி தேர்தல் கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மாநகராட்சிகள், 6 நகரசபைகள் உள்பட 14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2 மாநகராட்சிகள் உள்பட 14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவம்பர் 12-ந்தேதி தேர்தல் கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Published on

பெங்களூரு,

இது தொடர்பாக கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஜோக்-கார்கலா பட்டண பஞ்சாயத்து, பல்லாரி மாவட்டம் கம்பிளி புரசபை, கூட்லகி பட்டண பஞ்சாயத்து, ராமநகர் மாவட்டத்தில் கனகபுரா நகரசபை, மாகடி புரசபை, தாவணகெரே மாவட்டத்தில் தாவணகெரே மாநகராட்சி, கோலார் மாவட்டத்தில் கோலார், முல்பாகல், கோலார் தங்கவயல் (கே.ஜி.எப்.) ஆகிய நகரசபைகள், சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கவுரிபித்தனூர், சிந்தாமணி ஆகிய நகரசபைகள், சிக்கமகளூரு மாவட்டத்தில் பிரூர் புரசபை, தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு மாநகராட்சி, தார்வார் மாவட்டத்தில் குந்துகோல் பட்டண பஞ்சாயத்துகள் காலியாக உள்ளன. இந்த 14 உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற டிசம்பர் மாதம் நிறைவடைகிறது. இதையொட்டி அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவம்பர் மாதம் 12-ந் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 418 வார்டுகள் உள்ளன.

இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. மனுக்கள் தாக்கல் செய்ய வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். நவம்பர் 2-ந் தேதி மனுக்கள் பரிசீலனை, மனுக்களை வாபஸ் பெற 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். 14-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். இந்த பகுதிகளில் மொத்தம் 1,388 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

13 லட்சத்து 4 ஆயிரத்து 614 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள். மேலும் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா புரசபை, சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் நகரசபை, விஜயாப்புரா மாவட்டம் சடசன பட்டண பஞ்சாயத்து, பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கபுரா புரசபை, கலபுரகி மாவட்டம் சித்தாபுரா புரசபை ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள தலா ஒரு வார்டுக்கும் அதே தேதியில் இடைத்தேர்தல் நடக்கிறது.

அதே போல் சாம்ராஜ்நகர் மாவட்ட பஞ்சாயத்தில் ஒரு வார்டு, சாம்ராஜ்நகர், உடுப்பி, கதக், கொப்பல் மாவட்டம் குஷ்டகி ஆகிய தாலுகாக்களில் தலா ஒரு வார்டு காலியாக உள்ளது. இது மட்டுமின்றி கிராம பஞ்சாயத்துகளில் 213 வார்டுகள் காலியாக உள்ளன. இந்த வார்டுகளுக்கு நவம்பர் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 31-ந் தேதி கடைசி நாள். மனுக்கள் பரிசீலனை நவம்பர் 2-ந் தேதியும், மனுக்களை வாபஸ் பெற 4-ந் தேதியும் கடைசி நாள் ஆகும். நவம்பர் 14-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறை உடனடியாக அமலுக்கு வருகின்றன.

இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com