காஞ்சீபுரம், செங்கல்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.7¾ லட்சம் பறிமுதல்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.7¾ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
காஞ்சீபுரம், செங்கல்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.7¾ லட்சம் பறிமுதல்
Published on

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் கூட் ரோட்டில் நேற்று அதிகாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சக்திவேல் தலைமையில் செங்கல்பட்டில் இருந்து திருப்போருர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்களை சோதனை செய்தனர்.

அப்போது ஒரு மினி வேனில் படப்பையை சேர்ந்த செந்தூர்பாண்டியன், உத்தமபாளையத்தை சேர்ந்த பாலுசாமி, சேது, மணிகண்ட பிரபு, முத்து, மேல்படப்பையை சேர்ந்த சேட் ஆகியோர் இருந்தனர். அவர்கள், திருக்கழுக்குன்றத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் மாட்டு சந்தையில் மாடுகள் வாங்குவதற்காக ரூ.5 லட்சத்து 27 ஆயிரத்து 700 எடுத்து வந்தனர்.

ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் முத்து வடிவேலுவிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் காஞ்சீபுரம் அருகே கீழம்பி என்ற இடத்தில் காஞ்சீபுரம் பறக்கும் படை அதிகாரி அகிலாதேவி தலைமையில் கீழம்பி ஜங்சனில் வாகனங்களை நிறுத்தி பறக்கும் படையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 480 உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், காஞ்சீபுரம் அடுத்த திம்மராஜம்பேட்டையை சேர்ந்த முறுக்கு வியாபாரி ஞானபிரகாசம் தமிழ்நாடு, ஆந்திர மாநில பகுதியில் முறுக்கு விற்பனை செய்துவிட்டு வசூலான பணத்தை கொண்டு வந்தது தெரியவந்தது.

மதுராந்தகம் செய்யூர் சூணாம்பேடு செல்லும் சாலையில் முதுகரை என்ற இடத்தில் பறக்கும் படை அதிகாரி ராஜசேகர் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சித்தாமூரில் இருந்து பவஞ்சூர் நோக்கி சென்ற லாரியை முதுகரையில் மடக்கி சோதனையிட்டனர்.

அப்போது அதில் இருந்த தர்பூசணி வியாபாரியிடம் கணக்கில் வராத ரூ.98,500 இருந்ததை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு காஞ்சீபுரம், செங்கல்பட்டு பகுதியில் மொத்தம் ரூ.7 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com