தேர்தல் பறக்கும் படை சோதனை டாஸ்மாக்கில் வசூலான ரூ.53 லட்சம் பறிமுதல்

குன்றத்தூரில் நடந்த தேர்தல் பறக்கும் படை சோதனையில், டாஸ்மாக்கில் வசூலான ரூ.53 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் பறக்கும் படை சோதனை டாஸ்மாக்கில் வசூலான ரூ.53 லட்சம் பறிமுதல்
Published on

பூந்தமல்லி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஆங்காங்கே பறக் கும் படை அமைத்து சோதனை செய்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் இரவு வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அதிகாரிகள் வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான ரூ.53 லட்சத்தை வாங்கி தேனாம்பேட்டையில் உள்ள தனியார் வங்கிக்கு கொண்டு செல்வதாகவும், தாங்கள் தனியார் ஏஜென்சி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல் தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் பிள்ளைப்பாக்கம் கூட்டுச் சாலையில் தனி வட்டாட்சியர் சுமதி தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், தனி வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான பறக்கும் படையினர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் அந்த வழியாக வந்த வேனில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3 லட்சத்து 81 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் மணலி அருகே பொன்னேரி நெடுஞ்சாலை எம்.எம்.எல்.எல். சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவகுமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்த காரில் ரூ.5 லட்சம் இருந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பணத்தை கொண்டு வந்தவர்களிடம் விசாரித்தபோது கர்நாடக மாநிலம் பெங்களூரு வானஸ்பாடி கிரீன் பார்க்அவென்யூ பகுதியை சேர்ந்த மெட்ரோ ரெயில் ஒப்பந்ததாரர் சந்திரசேகரரெட்டி என்பதும், திருவொற்றியூரில் நடைபெறும் மெட்ரோ ரெயில் பணி செலவுக்காக பணத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது.

ஆனால் பணத்திற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து உரிய ஆவணங்களை கொண்டு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறிய பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பொன்னேரி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை மணலியை சேர்ந்தவர் தங்கச்செல்வன் (வயது 37). இவர், செங்குன்றம் பஸ் நிலையத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், நேற்று பொன்னேரியில் இருந்து மினி வேனில் ரூ.64 ஆயிரத்துடன் செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பாடியநல்லூர் போலீஸ் செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் தங்கச்செல்வன் வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் இருந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.64 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார், மாவட்ட துணைத்தேர்தல் அதிகாரி ரமேசிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com