வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது

வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்று அரசியல் கட்சியினருக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது
Published on

ஊட்டி,

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம், ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் திறக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 0423-2445577, கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 0462-261295, குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 0423-2206002, மாவட்ட கலெக்டர் 9444166000, போலீஸ் சூப்பிரண்டு 9498107333 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். சாதி, மத உணர்வுகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பதை தவிர்க்க வேண்டும். மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் அரசியல் கட்சியினர் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்யும்போது, 5 நபர்கள் மட்டும் செல்ல வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும். கட்சி விளம்பரங்களை அகற்ற தவறினால், அதற்கான செலவினம் தேர்தல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். வாக்குப்பதிவு நாளில் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தேர்தல் அலுவலர்களுடன் ஒத்துழைத்து அமைதியாகவும், நல்ல முறையிலும் தேர்தலை நடத்தி முடிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு பிறகு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறும்போது, நீலகிரியில் 3 சட்டமன்ற தொகுதிகளில் தலா 3 என்ற அடிப்படையில் என 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்து செல்லக்கூடாது. ஆவணங்களுடன் எடுத்து வந்தால் சரிபார்த்து விடுவிக்கப்படும். பத்திரிகை, டி.வி.க்களில் வெளிவரும் செய்திகள் குறித்து கண்காணிக்க மாவட்ட அளவில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. வருவாய் உள்ளிட்ட துறைகளில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள், ஒரே தொகுதியில் பணியாற்றிய 25-க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com