வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
Published on

நெல்லை,

தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராதாபுரம், நாங்குநேரி என 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 25 லட்சத்து 37 ஆயிரத்து 683 வாக்காளர்கள் உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நேற்று நடந்தது. நெல்லை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 979 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இதில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சரிபார்த்தனர். விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

18 வயது நிரம்பியவர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயதுக்கான அத்தாட்சி கல்வி சான்றிதழ், பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். பல வாக்குச்சாவடிகளில் காலையில் கூட்டம் அதிகமாக இருந்தது. வரிசையில் நின்று விண்ணப்பங்களை கொடுத்து சென்றனர். சில வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை பார்வையிட்டனர்.

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் கல்லூரி மாணவ-மாணவிகள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். பின்னர் கலெக்டர் முன்னிலையில், தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஓட்டுப்போடுவது எப்படி என்பது பற்றி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) சுகபுத்ரா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com