

ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வரும் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மின் வாரியத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறோம். நீலகிரியில் மொத்தம் 130 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். எங்களுக்கு இதுநாள் வரை எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்க வில்லை. எனவே பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகிறோம். எங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மின்வாரிய நிர்வாகத்திடம் ஆலோசித்து பணி நிரந்தரம் செய்து, வாழ்வாதாரத்தை உயர்த்த வழிவகை செய்ய தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.