மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அலுவலகங்கள் வெறிச்சோடின

விழுப்புரம் மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அலுவலகங்கள் வெறிச்சோடின
Published on

விழுப்புரம்

ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே திட்டமிட்டப்படி தமிழகம் முழுவதும் நேற்று மின்வாரிய ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு, பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு பவர் என்ஜினீயர்ஸ் அமைப்பு, மின்வாரிய அனைத்து பணியாளர் பொறியாளர் சங்கம் உள்பட 10 சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள், செயற்பொறியாளர் அலுவலகங்கள், உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள், இளமின் பொறியாளர் அலுவலகங்கள் என 170 அலுவலகங்களில் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த வேலை நிறுத்தத்தையொட்டி அந்தந்த மின்வாரிய அலுவலக நுழைவுவாயில் முன்பு ஊழியர்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர். அதன்படி விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள இளமின் பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பாரதீய மின் தொழிலாளர் சம்மேளன மாநில செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் அனைத்து பணியாளர் பொறியாளர் சங்க திட்ட தலைவர் அறிவுக்கரசு, மாநில பொதுச்செயலாளர் சண் முகம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலைவர் சேகர், பழனிவேல் உள்பட மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் அலுவலர்கள் பணிக்கு வந்தபோதிலும் ஊழியர்கள் பணிக்கு வராததால் அனைத்து அலுவலகங்களும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. வேலை நிறுத்தம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாவட்டம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் 4 ஆயிரத்து 800 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று (அதாவது நேற்று) களப்பிரிவு ஊழியர்களில் இருந்து முகவர் முதல்நிலை கணக்கீட்டு பிரிவில் உள்ள அனைத்து பணியாளர்கள் வரை 4 ஆயிரம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக புதிய மின் இணைப்பு வழங்கும் பணி, மின் வினியோகம் தடை செய்யப்பட்ட இடங்களில் அதை சரிசெய்யும் பணி, மின்வாரியத்திற்கு வரவேண்டிய வருவாயை வசூல் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளும் முடங்கியது என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com