

கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வருகிற 1-ந்தேதி பள்ளி திறப்புக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னங்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் தலைமை தாங்கினார். கே.வி.குப்பம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கண்ணன், கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தரராஜன் வரவேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் முனிசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கற்று 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 1-ந்தேதி பள்ளிகள் திறப்பது தொடர்பான அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், பள்ளி வளாகத் தூய்மை, குடிநீர், கழிவறை வசதிகள், இல்லம்தேடி கல்வி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் செய்தல், பள்ளி மேலாண்மை தகவல்களை புதுப்பித்தல், தன்னார்வலர்களை தேர்வு செய்தல் போன்றவை குறித்து எடுத்துக் கூறினார்.
கூட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுனர்கள், பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.