யானைகள் அடிக்கடி நடமாடும் வனப்பகுதிகளில் யானை தாண்டா பள்ளம் அமைக்கப்படும்

யானைகள் அடிக்கடி நடமாடும் வனப்பகுதிகளில் யானை தாண்டா பள்ளம் அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
யானைகள் அடிக்கடி நடமாடும் வனப்பகுதிகளில் யானை தாண்டா பள்ளம் அமைக்கப்படும்
Published on

தர்மபுரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஒட்டையனூர் பகுதியில் 3 பேரை தாக்கி கொன்ற காட்டு யானை ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்தது. அந்த யானையை வனத்துறையினர் நேற்று முன்தினம் மயக்க ஊசி பொருத்தப்பட்ட துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த யானையை கர்நாடகா- தமிழக எல்லையான பிலிகுண்டுலு வனப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக அந்த யானை லாரி மூலம் அஞ்செட்டியில் இருந்து நாட்றாம்பாளையம் கொண்டு செல்லப்பட்டது. பிடிபட்ட யானையை சாமசனஅள்ளி என்ற இடத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது யானை தாக்கி உயிரிழந்த தேவன் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

இதுதொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறிய ஒற்றை யானை தாக்கியதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிர நடவடிக்கையால் பிடிபட்ட யானையை ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலு வனப்பகுதியில் 10 கி.மீ. தொலைவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யானை நடமாட்டம் இருக்கும் காலங்களில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதுதொடர்பாக வனத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். யானை தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. சரியான சான்றிதழ்களை ஒப்படைத்த பின்னர் முழு நிவாரண தொகையில் மீதமுள்ள ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும். யானைகள் அடிக்கடி நடமாடும் வனப்பகுதிகளில் யானை தாண்டா பள்ளம் (அகழி) அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக யானையை வனப்பகுதியில் விடுவது தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலெக்டர் விவேகானந்தன், தர்மபுரி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் உலகநாதன், மாவட்ட வன அலுவலர்கள் தீபக்பில்கி(கிருஷ்ணகிரி) திருமால் (தர்மபுரி) ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com