

திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட ஆயூதபடை மைதானத்தில் நேற்று பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களில் அரசின் விதிமுறைப்படி இயக்கப்படுகின்றதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு விதிமுறைகளின் படி பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 84 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் வாகனங்களில் அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி போன்ற வசதிகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தகுதி சான்று ரத்து
பள்ளி வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வருவதற்கு உதவியாளர் ஒருவர் கண்டிப்பாக நியமிக்கப்பட வேண்டும். வாகனங்களை இயக்கும்போது டிரைவர்கள் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். இந்த ஆய்வில் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 8 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில் குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.