கிரானைட் குவாரியை மூட வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்

கிரானைட் குவாரியை மூட வலியுறுத்தி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன்கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கிரானைட் குவாரியை மூட வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்
Published on

நாமக்கல்,

கிரானைட் குவாரியை மூட வலியுறுத்தி பரமத்திவேலூர் தாலுகா சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன்கார்டுகளை ஒப்படைக்க வந்தனர். அவர்களிடம் அங்கு பாதுகாப்புக்கு நின்ற நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிரானைட் குவாரியை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன்கார்டுகளை ஒப்படைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை என கூறினர்.

இதையடுத்து அங்கு வந்த கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஜெயந்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குவாரியை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இருப்பினும் எங்கள் கிராமத்தை சேர்ந்த 10 பேர் மீது இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து அவர்களை போலீசார் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் அழைத்து சென்றனர். அவரிடம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :-

சித்தம்பூண்டி கிராமத்தில் செயல்படும் கிரானைட் குவாரிகளால் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், அனைத்து மக்களும் இணைந்து கிரானைட் குவாரியை மூட ஜனநாயக முறையில் போராடினோம். ஆனால் எங்கள் கிராமத்தை சேர்ந்த 10 பேர் மீது மட்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருச்செங்கோடு உதவி கலெக்டர் முன்னிலையில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர்.

எங்கள் போராட்டத்திற்கு தனிநபர் யாரும் தலைமை கிடையாது. எனவே கிராம மக்கள் அனைவரின் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உதவி கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், குவாரியை மூட உத்தரவிட்டு உள்ளேன். திருச்செங்கோடு உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுங்கள். உதவி கலெக்டர் இருதரப்பையும் விசாரித்து முடிவு எடுப்பார் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com