நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி கவர்னர் கிரண்பெடி நடை பயணம்

நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி கவர்னர் கிரண்பெடி நடை பயணம் சென்றார்.
நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி கவர்னர் கிரண்பெடி நடை பயணம்
Published on

பாகூர்,

பாகூர் அருகே குருவி நத்தம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சித்தேரி அணைக்கட்டு பகுதியை நேற்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டார். பின்னர் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி அவர் நடை பயணத்தை தொடங்கினார்.

சித்தேரி அணைக்கட்டை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தை கவர்னர் கிரண்பெடி பாராட்டினார். நீர் நிலைகளை பாதுகாக்க பல்வேறு நிறுவனங்களும் முன் வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து 7 கி.மீட்டர் நடைபயணத்தை மேற்கொண்ட கவர்னர் கிரண்பெடி மணப்பட்டு தாங்கல் ஏரிப்பகுதியில் நடைபயணத்தை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது;-

புதுச்சேரியில் 19 வாய்க்கால்கள் சி.எஸ்.ஆர்.நிதியின் மூலமாக தூர்வாரப்பட்டுள்ளது. இதில் 7 வாய்க்கால்கள் கிராமப்புறங்களிலும், 12 வாய்க்கால்கள் நகர பகுதியிலும் உள்ளன. இன்றைய தினம் தூர்வாரி முடிக்கப்பட்ட சித்தேரி வாய்க்காலை முழுமையாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

இது உடற்பயிற்சி என நினைக்க வேண்டாம். நீர் நிலைகளை பாதுகாத்திடவும், தண்ணீரை சேமித்திட வேண்டும் என்பதும் நமது நோக்கம். அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி புதுச்சேரி ராஜ் நிவாசில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் சேமிப்பிற்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட உள்ளது. இதில், பொது மக்களும் பங்கேற்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கவர்னரின் தனி செயலாளர் சுந்தரேசன், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் மகாலிங்கம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com