பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஊட்டி,

ஊரடங்கு உத்தரவால் வருவாய் மற்றும் வேலை இழந்து தவிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.12,500 உதவித்தொகை ஆறு மாத காலம் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி மோகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. நிர்வாகி சார்லஸ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்தால் ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். பணி வழங்காத காலத்திற்கு சொந்த விடுப்பை கழிக்கக்கூடாது. தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். விலை உயர்வை ரத்து செய்வதோடு, பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இதேபோன்று குன்னூர், கோத்தகிரி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊட்டி ராஜீவ்காந்தி ரவுண்டானா பகுதியிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது. மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் கூடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. மண்டல பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் வாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு யோகசசி, குஞ்சுமுகமது, தொ.மு.ச. ரகுபதி, அசோகன், உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com