மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி: கடைகளுக்கு தீ வைத்த 13 பேர் கைது

மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலியானதை தொடர்ந்து, அங்குள்ள கோவிலில் உள்ள கடைகளுக்கு தீ வைத்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி: கடைகளுக்கு தீ வைத்த 13 பேர் கைது
Published on

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை அருகேயுள்ள லந்தக்கோட்டையை அடுத்த கரும்புளிபட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 37). இவர் மின்சார வாரியத்தில் தினக்கூலி அடிப்படையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாளிகைபாறை கார்மேக கருப்பசாமி கோவில் பகுதியில் மின்சார இணைப்பை துண்டித்து விட்டு, மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மின்கம்பியில் மின்சாரம் பாய்ந்ததால் பாண்டியன் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மின் இணைப்பு துண்டித்து இருந்த நேரத்தில் அருகில் உள்ள ஜெனரேட்டரை இயக்கியதாக தெரிகிறது.

இதன்மூலம் ஜெனரேட்டரில் உற்பத்தியான மின்சாரம் தவறான இணைப்பால், மின்கம்பியில் பாய்ந்தது. அதனால் பாண்டியன் மீது மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலின் முன்பு திரண்டனர்.

அங்கு கோவிலின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள், ஒரு வேன், 2 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர். மேலும் பூக்கடை, டீக்கடை, புகைப்படகடை ஆகியவற்றையும் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். மேலும் அங்கு அசம்பாவிதம் சம்பவம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரி செல்வம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், லந்தக்கோட்டையை சேர்ந்த சாமியப்பன்(40), கார்த்திக் (32), சந்திரசேகர் (52), பாலகிருஷ்ணன் (47), பாண்டியன் (45), வீரப்பன் (50), சரவணன், ராஜா, லெட்சுமணன், துரைச்சாமி, ராஜா, கிருஷ்ணசாமி, சுரேஷ், ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com