

தர்மபுரி,
சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய கழகத்தின் மூலம் 2015-2016-ம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட 195 பணிநாடுனர்களுக்கு காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிடங்களுக்கான பணிநியமன கலந்தாய்வு இணையதளம் வழியாக மாநிலத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 பணிநாடுனர்கள் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பணிநியமன கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இணையதளம் மூலம் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் இவர்களுக்கு காண்பிக்கப்பட்டன. இவர்களில் 12 பேர் தர்மபுரி மாவட்டத்திற்குள் உள்ள பள்ளிகளிலும், ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளியிலும் காலி பணியிடங்களை தேர்வு செய்தனர். 13 பேருக்கும் பணி நியமன ஆணைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வழங்கினார். அப்போது முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.