நெல்லை கலெக்டர் அலுவலகத்தை, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை
Published on

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

பாளையங்கோட்டை அருகே உள்ள முத்தூர் குத்துக்கல் கிராம மக்கள் தங்கள் ஊரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி காலிக்குடங்களுடன் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒரு வருடமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி தண்ணீர் மாதத்திற்கு ஒரு நாள் தான் வருகிறது. எங்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்குழாய் கிணறு அமைத்து தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

நாங்குநேரி அருகே உள்ள பதைக்கம் ஏ.டி.காலனி, பார்பரம்மாள்புரம் மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, பார்பரம்மாள்புரத்தில் வைத்து வாரத்தில் ஒரு நாள் ரேஷன் பொருட்கள் வழங்க வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

சேரன்மாதேவி கன்னடியன் கால்வாய் விவசாய சங்கத்தினர் தலைவர் பாபநாசம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், பாபநாசம் அணை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் இல்லை. எனவே கால்நடைகள் குடிப்பதற்காகவும், கால்நடைகளின் தீவனத்திற்காகவும் கன்னடியன் கால்வாயில் 10 நாட்கள் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் தலைமையில் காங்கிரசார் கொடுத்த மனுவில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரி கரைகளை செம்மைப்படுத்தி வருகிறார்கள். இதேபோல் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா தோட்டாக்குடி பஞ்சாயத்து மருதகுளத்தில் உள்ள குளத்தை தூர்வார அனுமதி அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆலங்குளம் தொகுதி தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என்று வக்கீல் பால்ராஜ் மனு கொடுத்தார்.

நெல்லை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்ய வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்புலிகள் அமைப்பினர் மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், முன்னாள் மேயர் உமாமகேசுவரியுடன் கொலை செய்யப்பட்ட அவருடைய வீட்டு பணிப்பெண் மாரியின் மகள் ஒருவருக்கு அரசு வேலையும், அவர்களுக்கு இலவச வீடும் வழங்கவேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு முன்பு முறையாக மக்களுக்கு அறிவிப்பு கொடுத்தும், அந்த கல்வி கொள்கை குறித்து மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் விளம்பரப்படுத்திய பிறகு தான் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழர் தேசிய கொற்றம் நிறுவன தலைவர் வியனரசு மனு கொடுத்தார். அதில், நெல்லை மாவட்டத்தில் பல வேலைகளை செய்ய வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்துள்ளனர். அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்களை விற்பனை செய்கிறார்கள். மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே வடமாநிலத்தை சேர்ந்தவர் எத்தனை பேர் நெல்லை மாவட்டத்தில் உள்ளனர் என்று கணக்கெடுப்பு நடத்தி அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மனு கொடுக்க வந்தவர்கள் கோஷங்கள் போட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலவச வீடு கேட்டு மனு கொடுக்க வந்த இந்து அமைப்பை சேர்ந்தவர்களும் கோஷங்கள் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் செய்து வைத்தனர்.

நெல்லை அருகே உள்ள பாலாமடை பகுதி விவசாயிகள், தங்கள் ஊரில் தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகளை சரி செய்ய வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

அருந்ததியர் பெண்கள் எழுச்சி இயக்கத்தினர் கொடுத்த மனுவில், நெல்லை அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளியின் மூலம் கம்ப்யூட்டரில் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏஜெண்டுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நெல்லை அருகே நல்லம்மாள்புரத்தில் ஊர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த நிலத்திற்கு ஊர் பொதுகாடு என்ற பெயரில் பட்டா வழங்கவேண்டும் என்று கூறி நல்லம்மாள்புரம் ஊர் மக்கள் மனு கொடுத்தனர்.

வீரகேரளம்புதூர் கோவில் குளத்தில் உள்ள தண்ணீர் சிவப்பு நிறமாக மாறி வருகிறது. எனவே குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தவேண்டும். மேலும் ஆகம விதிப்படி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று கூறி நிறமாறிய தண்ணீருடன் வக்கீல் சுப்பையா கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்.

சங்கரன்கோவிலை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தங்கள் ஊரில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை சரி செய்யவேண்டும் என்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை உள்ளே செல்ல அனுமதித்தபோது அவர் சட்டையில் இருந்த டெஸ்டரை போலீசார் வாங்கி வைத்து கொண்டு உள்ளே அனுப்பினார்கள். பின்னர் வெளியே வந்த ராஜேந்திரன் தனது டெஸ்டரை கேட்டபோது போலீசார் இல்லை என்று கூறிவிட்டனர். இதனால் போலீசாருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் மறியல் செய்ய முயற்சி செய்தார். உடனே அவரிடம் அங்கிருந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு அவர் அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் வேகத்தடை அமைக்கவேண்டும். குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறி அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

சங்கர்நகர் அருகே பண்டாரகுளத்தில் உள்ள குடிநீர் கிணறுகளை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என்று அந்த ஊர்மக்கள் மனு கொடுத்தனர். வடக்கு விஜயநாராயணம் குளத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தடுப்புச்சுவர் கட்டவேண்டும். விவசாயிகளை அதிகாரிகள் கலந்து ஆலோசனை நடத்தி குடிமராமத்து பணிகளை செய்யவேண்டும் என்று கூறி விவசாயிகள் மனு கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com