தாவூத் கூட்டாளியுடன் வர்த்தக தொடர்பு புகாரில் சிக்கிய முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேலிடம் அமலாக்கத்துறை விசாரணை

தாவூத் இப்ராகிம் கூட்டாளியுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததாக புகாரில் சிக்கிய முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
தாவூத் கூட்டாளியுடன் வர்த்தக தொடர்பு புகாரில் சிக்கிய முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேலிடம் அமலாக்கத்துறை விசாரணை
Published on

மும்பை,

நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி இக்பால் மிர்ச்சி. இவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2006-07-ம் ஆண்டில் அப்போதைய மன்மோகன் சிங் அரசில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரியாக இருந்த, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேலுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் சிஜே ஹவுஸ்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியது.

அந்த கட்டிடத்தின் 3 மற்றும் 4-வது தளங்கள் இக்பால் மிர்ச்சியின் மனைவி ஹஜ்ரா இக்பால் பெயருக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே 2013-ம் ஆண்டு லண்டனில் இக்பால் மிர்ச்சி மரணம் அடைந்தார்.

இந்த நிலையில், இக்பால் மிர்ச்சியின் அந்த இடம் சட்டவிரோத செயல்கள் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கியது என கண்டறியப்பட்டு உள்ளது.

இதுபற்றி அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இதில் பிரபுல் பட்டேலுக்கும், இக்பால் மிர்சிக்கும் இடையே வர்த்தக தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக பிரபுல் பட்டேலையும் விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதன்படி அக்டோபர் 18-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி பிரபுல் பட்டேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால் தனக்கும், இக்பால் மிர்ச்சிக்கும் வர்த்தக தொடர்பு இருந்ததாக கூறப்படுவது யூகத்தின் அடிப்படையிலானது என கூறி தன் மீதான குற்றச்சாட்டை பிரபுல் பட்டேல் மறுத்தார்.

இந்த நிலையில், நேற்று அமலாக்கத்துறையினர் சம்மனை ஏற்று நேற்று அவர் தென்மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், நேற்று நாக்பூரில் நிருபர்களை சந்தித்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய பி.எம்.சி. வங்கியில் நடந்த ரூ.4,355 கோடி முறைகேடு வழக்கிலும் பிரபுல் பட்டேலிடம் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என அவரது பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக கூறினார்.

மன்மோகன் சிங் ஆட்சியின் போது, போன் அழைப்புகள் மூலம் பெரியளவில் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. தற்போது அமலாக்கத்துறை விசாரணையை சந்திக்கும் சிலரிடம் பி.எம்.சி. வங்கி முறைகேடு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com