தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் என்ஜினீயர் கைது

கருங்கல் அருகே தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட என்ஜினீயர், ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டுக்காக பல இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.
தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் என்ஜினீயர் கைது
Published on

கருங்கல்,

கருங்கல் அருகே தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட என்ஜினீயர், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்காக பல இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

என்ஜினீயர்

குமரி மாவட்டத்தில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு அடிக்கடி நடந்து வந்தது. இதில் துப்புதுலக்க குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி மேற்பார்வையில், கருங்கல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ இடம் பெற்று உள்ளனர். தனிப்படை போலீசார் கருங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் வந்தார். அவரை போலீசார் தடுத்து விசாரித்தனர். அவர் மேக்காமண்டபம் ஈத்தவிளையை சேர்ந்த ஜாண் மகன் ஜஸ்டின்ராஜ் (வயது 21) என்றும், இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்ததும், கூடைப்பந்து விளையாட்டில் பல்கலைக்கழக அளவில் சிறந்த வீரர் என்பதும் தெரிய வந்தது.

ஆன்லைன் ரம்மி

மேலும் ஜஸ்டின் ராஜ், ஆன் லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர். இந்த விளையாட்டு மூலம் தொடக்கத்தில் சிறு தொகையை லாபமாக ஈட்டிய ஜஸ்டின்ராஜ், பின்னர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பணத்தை இழக்க தொடங்கினார். சுமார் ரூ.2 லட்சம்வரை இழந்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்து சிறு தொகைகளை எடுத்தும், வீட்டு உபயோக பொருட்களை திருடி விற்றும் ஆன் லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு உள்ளார். இதனால் வீட்டில் உள்ளோருக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து ஜஸ்டின்ராஜ் ஆன் லைன் ரம்மி விளையாடுவதற்கு தேவையான பணத்திற்காக தனது நண்பருடன் சேர்ந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கைது

இதற்காக அவர் கருங்கல், இரணியல், திருவட்டார் போலீஸ் நிலையங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது.

ஜஸ்டின் ராஜூடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் சங்கிலி பறிப்பில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜஸ்டின் ராஜை போலீசார் கைது செய்து, இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழிப்பறி வழக்கில் இவரின் கூட்டாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

என்ஜினீயரிங் முடித்த பட்டதாரி ஆன் லைன் ரம்மி விளையாட்டுக்காக பல இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com