சேலத்தில் என்ஜினீயர் கொலை வழக்கு: சிறையில் இருந்த 2 பேர் கைது

சேலத்தில் என்ஜினீயர் கொலை வழக்கு தொடர்பாக, சிறையில் இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் என்ஜினீயர் கொலை வழக்கு: சிறையில் இருந்த 2 பேர் கைது
Published on

சேலம்,

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). என்ஜினீயரான இவர் கடந்த 2013-ம் ஆண்டு நெத்திமேடு அருகே கட்டிட பணியை பார்வையிட சென்றார். அப்போது பட்டப்பகலில் மர்ம ஆசாமிகளால் வினோத் குமார் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் துப்பு துலங்காததால் வழக்கை கண்டுபிடிக்க முடியாத வழக்கு எனக்கூறி கோர்ட்டு முடித்து வைத்தது.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் அம்மாபேட்டையை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் கோபி கடத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோபியின் நண்பரான அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரியகவுண்டாபுரம் பகுதியை சேர்ந்த திருமணிகண்டன் (36), இவருடைய கூட்டாளி ஏழுமலை ஆகியோரை அம்மாபேட்டை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் என்ஜினீயர் வினோத்குமார் கொலையில் துப்பு துலங்கியது. அதாவது, ஓட்டல் உரிமையாளர் கோபியின் மனைவிக்கும், வினோத்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரை கொலை செய்ய கோபி திருமணிகண்டனிடம் கூலிப்படையை தயார் செய்யவும், இதற்காக ரூ.3 லட்சத்தை கொடுத்ததும் தெரியவந்தது.

பின்னர் திருமணிகண்டன் பணத்தை பெற்றுக்கொண்டு கூலிப்படையை சேர்ந்த சதீஸ்குமார் என்பவரை ஏற்பாடு செய்தார். அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வினோத்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் சதீஸ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் அன்னதானப்பட்டி போலீசார் வினோத்குமார் கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுமதிக்குமாறு சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இதையடுத்து வழக்கை விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதனால் நேற்று முன்தினம் திருமணிகண்டன், சதீஸ்குமார் ஆகியோரை சிறையில் வைத்து போலீசார் இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com