

எடப்பாடி,
நெல்லை தச்சநல்லூர் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முருகன் மகன் சதீஷ்குமார்(வயது 21). என்ஜினீயர். இவர் கடந்த 24-ந்தேதி தனது நண்பர்களுடன் சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள நண்பரின் வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு வந்திருந்தார். பின்னர் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இறங்கி குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்து அவருடன் குளித்த நண்பர்கள் அலறினார்கள்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள், நீச்சல் தெரிந்தவர்கள் மீன்பிடி படகில் சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சதீஷ்குமாரை தேடினார்கள். அவர் கிடைக்கவில்லை. 2-வது நாளும் தீயணைப்பு வீரர்கள் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சதீஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சதீஷ்குமாரின் தந்தை முருகன், தாய் மணிகண்டேஸ்வரி, அண்ணன் பாண்டி மற்றும் உறவினர்கள் பூலாம்பட்டி காவிரி கரையோரத்தில் நின்றிருந்தனர்.
இந்த நிலையில் பூலாம்பட்டியை அடுத்த நெறிஞ்சிப்பேட்டை கதவணை மின் நிலையம் அருகே வாலிபர் ஒருவரது உடல் கரை ஒதுங்கி இருப்பதாக பூலாம்பட்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே பூலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். விசாரணையில் கரை ஒதுங்கிய வாலிபர் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் குளித்த போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியான சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது.
இது பற்றி அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். சதீஷ்குமாரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. பின்னர் இது குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.