இ-பாஸ் நடைமுறை, தொடர் மழை: ஊட்டிக்கு வர ஆர்வம் காட்டாத சுற்றுலா பயணிகள்

இ-பாஸ் நடைமுறை மற்றும் தொடர் மழையால் ஊட்டிக்கு வர சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.
இ-பாஸ் நடைமுறை, தொடர் மழை: ஊட்டிக்கு வர ஆர்வம் காட்டாத சுற்றுலா பயணிகள்
Published on

ஊட்டி,

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. எனினும் கடந்த 1-ந் தேதி முதல் பொது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேலும் இ-பாஸ் நடைமுறையும் விலக்கப்பட்டுள்ளது. ஆனால் நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு 9-ந் தேதி முதல் தோட்டக்கலை பூங்காக்களை திறக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று நீலகிரிக்கு வந்து செல்கின்றனர்.

ஆர்வம் இல்லை

இருப்பினும் சுற்றுலா பயணிகள் வரத்து மிக குறைவாகவே உள்ளது. இதனால் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 1 வாரமாக கூடலூர், பந்தலூர், ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை, தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனால் தோட்டக்கலை பூங்காக்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக பெரிய நிறுவனங்கள் தொடங்கி சிறிய கடைகள் வரை எதிர்பார்த்த வியாபாரம் வியாபாரிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எண்ணிக்கை குறைவு

ஊட்டி என்றாலே பழமை வாய்ந்த தாவரவியல் பூங்கா, படகு குழாம், தொட்டபெட்டா, ரோஜா பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளின் நினைவில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. ஆனால் கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரை தாவரவியல் பூங்காவுக்கு சுமார் 1,800 சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் பயணிகளுக்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்படுகிறது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் சுற்றுலா பயணிகள் வரத்து மிக குறைவாகவே உள்ளது. தற்போது வரை 1,800 பேர் மட்டுமே பூங்காவை ரசித்துள்ளனர். கடந்த காலங்களை ஒப்பிடும்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com