

மதுரை,
மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்யமூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் டாக்டர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு சாராத தன்னார்வலர்கள் என பலர் களப்பணியாற்றி வருகின்றனர்.
களத்தில் நின்று பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அம்மா உணவகத்தில் பல்வேறு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நெருக்கடி மிகுந்த இந்த காலத்தில் களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
பாதுகாப்பு உபகரணங்கள்
எனவே டாக்டர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு சாராத தன்னார்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடலை முழுமையாக பாதுகாக்கும் வகையிலான பாதுகாப்பு ஆடைகள், முககவசங்கள், கையுறைகள், ரப்பர் காலணிகள் உள்ளிட்டவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பதில் மனு தாக்கல்
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தது. அப்போது, வருவாய் நிர்வாக செயலாளர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-
இதுவரை வருவாய், சுகாதாரத்துறை, காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு களப்பணியாளர்களின் பாதுகாப்புக்காக ரூ.500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வார்டுகளில் பணிபுரிவோரின் பாதுகாப்புக் காக 2 லட்சத்து 80 ஆயிரத்து 696 பி.பி.எப். உடைகள், 2 லட்சத்து 17 ஆயிரத்து 240 முககவசங்கள், 2 லட்சத்து 80 ஆயிரத்து 696 கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
நீதிபதிகள் கேள்வி
இதையடுத்து நீதிபதிகள், களப்பணியாளர்கள் அனைவருக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? முககவசம், கையுறைகளை களப்பணியாளர்கள் முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வழிமுறை உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
விசாரணை முடிவில், இது தொடர்பாக தமிழக அரசு விரிவாக பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.