ஈரோட்டில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

ஈரோட்டில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது
Published on

ஈரோடு,

ஈரோடு அசோகபுரம் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் மையத்துக்கு ஒருவர் நேற்று காலை சென்றார். அவர் மசாஜ் செய்ய வேண்டும் என்று அங்குள்ள ஊழியரிடம் கேட்டுள்ளார். மசாஜ் செய்து முடித்த பிறகு ஊழியர்கள், கட்டணமாக ரூ.1,000 கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்தார். அப்போது மசாஜ் மையத்தின் ஊழியர் சில்லரை இல்லை என்று கூறியுள்ளார். மேலும், அருகில் உள்ள கடைக்கு சென்று சில்லரை மாற்றி வருவதாகவும், அதுவரை மசாஜ் மையத்தில் காத்திருக்குமாறும் கூறினார். இதனால் அந்த நபர் அங்குள்ள ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

மசாஜ் மையத்தின் ஊழியரும் அருகில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு சென்று ரூ.2 ஆயிரத்துக்கு சில்லரை கேட்டார். அப்போது அந்த நோட்டை வாங்கி பார்த்த கடைக்காரர், அது கள்ளநோட்டு என்று கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ஊழியர் உடனடியாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த நபரை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர், தர்மபுரி மாவட்டம் அரூர் சோளக்கொட்டாய் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முத்துவின் மகன் குமரேசன் (29) என்பதும், இவரும், சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 37) என்பவரும் சேர்ந்து ஜெராக்ஸ் எந்திரத்தில் கள்ளநோட்டுகளை பிரதி எடுத்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரம் கள்ளநோட்டுகளையும், ஜெராக்ஸ் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

கள்ள நோட்டுகளை பிரதி எடுத்து புழக்கத்தில் விடுவதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? அவர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு சென்று கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளனர்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com