ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கண்களில் கருப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்த பொதுமக்கள்

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மனு கொடுக்க வந்தனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கண்களில் கருப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்த பொதுமக்கள்
Published on

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெள்ளோடு சென்னிமலைபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அதன்பின்னர் கருப்பு துணியை அவிழ்த்துவிட்டு அவர்கள் மனு கொடுக்க சென்றனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

நாங்கள் இலங்கையில் இருந்து திரும்பி வந்து தாயகத்தில் வசித்து வருகிறோம். சென்னிமலைபாளையம் கிராமத்தில் 365 வீட்டுமனை பட்டாக்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்டன. ஆனால் நாங்கள் முழுமையாக அந்த பகுதிக்கு குடிபெயராததால் பட்டாக்கள் மீண்டும் பெறப்பட்டு விட்டன. அதன்பின்னர் 18 ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்தும் எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து மீண்டும் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

பொல்லான் வரலாறு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.வடிவேல் தலைமையில் மீட்புக்குழுவினர் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படை தளபதியாக இருந்த மாவீரன் பொல்லானுக்கு நினைவுச்சின்னம் மற்றும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பொல்லான் சுட்டுக்கொல்லப்பட்ட அறச்சலூர் நல்லமங்காபாளையத்தில் பொதுமக்கள் சார்பில் புறம்போக்கு நிலத்தில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் அதை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றிவிட்டனர். எனவே பொல்லானுக்கு நினைவுச்சின்னம் அமைக்க நல்லமங்காபாளையத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலத்தில் 10 சென்ட் இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அங்கு பொதுமக்கள் செலவில் மீண்டும் நினைவுச்சின்னம் அமைத்து கொள்கிறோம். மேலும், வருகிற மே மாதம் 2-ந் தேதி பொல்லானுக்கு நினைவு தினம் என்பதால், அதற்குள் நிலத்தை ஒதுக்கி தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கடந்த 1 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் பல கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டி உள்ளது. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பா.ஜ.க. மீனவர் அணி மாநில செயலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

பவானி அந்தியூர் ரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ஜெயம்மாள். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். செல்வராஜூக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜெயம்மாள் மீன்பிடி தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். கடந்த மாதம் 11-ந் தேதி இரவு ஜெயம்மாளும், அந்த பகுதியை சேர்ந்த யோகராஜூம் பவானி ஆற்றில் பரிசலில் மீன் பிடிக்க சென்றனர். இதில் பரிசல் கவிழ்ந்து அவர்கள் 2 பேரும் இறந்துவிட்டனர். எனவே இறந்த ஜெயம்மாளின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

ஆதித்தமிழர் பேரவை சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கோபி தாலுகா அலுவலகத்தில் உள்ள கழிப்பறை முறையாக சுத்தப்படுத்தாமல் உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிப்பறையை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் சங்க தலைவர் ஈ.வி.கே.சண்முகம் கொடுத்த கோரிக்கை மனுவில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஊதியம் உயர்த்தப்படவில்லை. அவர்களுக்கு ரூ.1,500 மட்டுமே மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இல்லையென்றால் ஈரோடு திண்டலில் உள்ள சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 12-ந் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்தியூர் கிழக்கு குப்பாண்டாம்பாளையம் கரட்டூர் பகுதியை சேர்ந்த குமாரின் மனைவி சுமதி கொடுத்த மனுவில், எங்களுக்கு இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். திடீரென எங்களது வீட்டை இடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே எங்களது வீட்டை இடிக்கக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com