ஈரோடு சோலாரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ‘திடீர்’ சோதனை - ரூ.2 லட்சம் சிக்கியது

ஈரோடு சோலாரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.2 லட்சம் சிக்கியது.
ஈரோடு சோலாரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ‘திடீர்’ சோதனை - ரூ.2 லட்சம் சிக்கியது
Published on

மொடக்குறிச்சி,

ஈரோடு சோலாரை அடுத்த கொள்ளுக்காட்டுமேடு என்ற இடத்தில் ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மாடியில் ஈரோடு சரக துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள் தாங்கள் வாங்கும் புதிய வாகனங்களை இங்கு கொண்டு வந்து பதிவு செய்வார்கள். மேலும் உரிமம், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இங்கு நடைபெறுகின்றன. அதனால் அனைத்து வேலை நாட்களிலும் இங்கு பொதுமக்களின் கூட்டம் காணப்படும்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக பகல் 12.30 மணி அளவில் 2 கார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் உள்பட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 10 பேர் வந்து இறங்கினார்கள். உடனே அவர்கள் அலுவலகத்தின் முன்வாசல் ஷட்டரை அடைத்தார்கள். அதன்பிறகு அலுவலகத்துக்குள் இருக்கும் அனைத்து கதவுகளையும் உள்பக்கமாக பூட்டினார்கள். இதனால் அலுவலகத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே இருந்த யாரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெளியே விடவில்லை. அப்போது வட்டார போக்குவரத்து அதிகாரி கண்ணன், கண்காணிப்பாளர் லியோ ஆன்டனி உள்பட 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளே இருந்தனர். உரிமம் பெற, வாகனத்தை பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்களும் இருந்தார்கள்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒவ்வொரு மேசையாக சென்று சோதனை நடத்தினார்கள். அலுவலகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் கொடுத்திருந்த பெரும்பாலான விண்ணப்பங்களில் 100, 500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் லஞ்சமாக கொடுக்க மறைத்து வைத்திருந்ததை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்தார்கள். லஞ்ச பணம் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த சோதனை நடந்தபோது அலுவலகத்தில் இடைத்தரகர்கள் 8 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கி உள்ளார்கள். இரவு 8 மணிக்கு மேலும் சோதனை தொடர்ந்து நடந்தது. மேலும் கூடுதலாக லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டதா? ஆவணங்கள் சிக்கியதா? என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையை முழுவதுமாக முடித்த பின்னரே தெரியவரும்.

அலுவலக ஊழியர்களின் பார்வைக்காக வைத்திருந்த விண்ணப்பங்களில் இருந்தே லஞ்சப்பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்ததால், லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீது உடனடி நடவடிக்கை பாயும் என்று தெரிய வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com