ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் குடியரசுதின விழா கோலாகலம்: கலெக்டர் சி.கதிரவன், தேசியக்கொடி ஏற்றினார் மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன

ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் சி.கதிரவன் தேசியக்கொடி ஏற்றினார். விழாவில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் குடியரசுதின விழா கோலாகலம்: கலெக்டர் சி.கதிரவன், தேசியக்கொடி ஏற்றினார் மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன
Published on

ஈரோடு,

இந்திய குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவையொட்டி விளையாட்டு மைதானத்தில் கொடிமேடை, பார்வையாளர்கள் அரங்கு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 7.50 மணிக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் அரசு மரியாதையுடன் மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரை விளையாட்டு அரங்க நுழைவுவாயிலில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா வரவேற்றார். போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கொடி மேடைக்கு வந்து போலீசாரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

8 மணிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், உரிய அரசு மரியாதையுடன் விழா மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கிறிஸ்துஜோதி பள்ளிக்கூட மாணவிகளின் பெருவங்கி வாத்தியக்குழு இன்னிசை முழங்க கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கொடிமேடைக்கு அழைத்துவரப்பட்டனர். கொடிமேடைக்கு வந்ததும் அங்கு தயாராக இருந்த கொடிக்கம்பத்தில் கலெக்டர் சி.கதிரவன் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது காவல்துறை இசைக்குழுவினர் தேசிய கீதம் இசைக்க, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேசியக்கொடிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்கள்.

போலீசார், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை அணிவகுப்பினை கலெக்டர் கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டனர். அவர்கள் மீண்டும் கொடி மேடைக்கு வந்தனர். உடனடியாக போலீசாரின் அணிவகுப்பு நடந்தது. ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் ஆயுதப்படை ஆண்-பெண் போலீசார் கம்பீரமாக அணிவகுத்து வந்தனர். அவர்களை தொடர்ந்து படைத்தளபதி குமரேசன் தலைமையில் ஊர்க்காவல் படையினரும், மாணவர் பிரபாகரன், மாணவி பிரீத்தி தலைமையில் தேசிய மாணவர் படையினரும் அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் கதிரவன் ஏற்றுக்கொண்டார்.

விழாவின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பச்சை, வெள்ளை, காவி நிற பலூன்களை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் பறக்கவிட்டனர். அப்போது பார்வையாளர்கள் உற்சாகமாக கைகளை தட்டி ஆர்ப்பரித்தனர்.

முதல்-அமைச்சர் பதக்கங்கள் பெற்ற 70 போலீசாருக்கு கலெக்டர் சி.கதிரவன் பதக்கங்கள் அணிவித்து வாழ்த்தினார். இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பான சமூகசேவை செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பாலமுரளி, போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வனத்துறை சார்பில் ரவீந்திரநாத், வருவாய்த்துறை ஆய்வாளர் ராமசாமி, வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தரவடிவேல், சுகாதாரத்துறை சார்பில் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் பிரபாவதிதேவி, உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் ரங்கநாயகி உள்பட பலர் பாராட்டு சான்றிதழ் பெற்றனர். ஈரோடை அமைப்பு நிறுவனரும், ஈரோடு சுதா ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனருமான டாக்டர் சுதாகர் நீர்நிலைகளை பாதுகாக்கும் சேவையை செய்து வருவதற்காக கலெக்டரிடம் இருந்து பாராட்டு சான்றிதழ் பெற்றார். இதுபோல் பெருந்துறை அமைதி பூங்கா அறக்கட்டளையினர், ஒளிரும் காளமங்கலம் அமைப்பினரும் பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.

விழாவில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 70 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் ரூ.26 லட்சத்து 27 ஆயிரத்து 158 மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் டிரைவராக பணியாற்றி வரும் செந்தில்குமாருக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com