

வால்பாறை,
வால்பாறை அருகே உள்ள பெரியகல்லார் எஸ்டேட் 4-வது பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி முத்துமாரி. இவரது மகள் சத்யா (வயது 10). முத்துமாரியும், சத்யாவும் வீட்டுக்கு பின்புறம் இருந்த விறகுகளை எடுத்து வீட்டுக்குள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்துள்ளனர். சத்யா தனது தாய்க்கு உதவி செய்து கொண்டிருந்த போது வீட்டுக்கு அருகில் இருக்கும் தேயிலைத் தோட்ட பகுதியை ஒட்டியுள்ள புதர் செடிக்குள்ளிருந்து ஓடி வந்த சிறுத்தைப்புலி சத்யாவின் கழுத்தை கடித்து இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த தாய் முத்துமாரி கூச்சலிட்டுக் கொண்டு விறகு கட்டையால் சிறுத்தைப்புலியை தாக்கி விரட்டியுள்ளார். அருகில் மீனம்மாள் என்ற பெண்மணியும் நின்று கூச்சலிட்டுள்ளார். இதனால் சிறுத்தைப்புலி சத்யாவை விட்டு விட்டு தேயிலைத் தோட்ட பகுதிக்குள் ஓடிவிட்டது.
பின்னர் அருகிலிருந்த தொழிலாளர்கள் சத்யாவை சிங்கோனா எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கும், வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சையளிக்கப்பட்டது.ஆனால் கழுத்தில் காயம் ஆழமாக இருந்ததாலும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும் தீவிர சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் கணேசன் உத்தரவின் பேரிலும், மாவட்டவனஅலுவலர் மாரிமுத்து அறிவுரையின் படியும் மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் தலைமையில் வனத்துறையினர் பெரியகல்லார் எஸ்டேட் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமேனி முன்னிலையில் போலீசாரும் வனத்துறையினருடன் இணைந்து பெரியகல்லார் எஸ்டேட் பகுதியில் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு நடத்தி சிறப்பு ரோந்துப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.
வனக்காவலர், வனப்பாதுகாவலர், வேட்டைத்தடுப்பு காவலர் ஆகியோர் அடங்கிய குழுவினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். வனச்சரகர் சேகர் அந்த பகுதி மக்களிடம் கவனமாக இருக்கும்படியும், அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் குழந்தைகளை வெளியே விடவேண்டாம் என்றும் மாலை நேரத்தில் குடியிருப்பு பகுதியில் தீமூட்டும் படியும், குடியிருப்பு பகுதியில் ஆடு, கோழி, நாய் போன்ற கால்நடைகளை வளர்க்கவேண்டாம் என்றும் எஸ்டேட் பகுதி மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர். அப்போது எஸ்டேட் பகுதி மக்கள் வனத்துறையினரிடம் டேன்டீ நிர்வாகத்தில் சொல்லி குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி வளர்ந்துள்ள புதர் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நகராட்சி நிர்வாகத்திடம் கூறி தேவைப்படும் இடங்களில் தெருவிளக்குகள் அமைத்து தருவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் பல குடியிருப்புகள் காலியாக உள்ளன. ஒவ்வொரு குடியிருப்புகளிலும் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் மட்டும் வசித்து வருகின்றார்கள்.எனவே தனித்தனியாக உள்ள குடும்பங்களை ஒரே பகுதியில் குடியமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இது குறித்து வனத்துறை சார்பிலும் போலீசார் சார்பிலும் டேன்டீ நிர்வாகத்திற்கு உயர் அதிகாரிகள் மூலம் கடிதம் எழுதி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.