ஒரு மாணவர் கூட, தேர்வு எழுத முடியாத நிலை உருவாகக்கூடாது - அதிகாரிகளுக்கு, மந்திரி சுரேஷ்குமார் உத்தரவு

கர்நாடகத்தில் வருகிற 25-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கும் நிலையில், ஒரு மாணவர் கூட தேர்வு எழுத முடியாத நிலை உருவாகக்கூடாது என்று அதிகாரிகளுக்கு மந்திரி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு மாணவர் கூட, தேர்வு எழுத முடியாத நிலை உருவாகக்கூடாது - அதிகாரிகளுக்கு, மந்திரி சுரேஷ்குமார் உத்தரவு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கொரோனா பீதிக்கு இடையே மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நேற்று பெங்களூருவில் இருந்தபடி, மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுரேஷ்குமார் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் வருகிற 25-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. மழை காலம் தொடங்கியுள்ளதால், வெள்ளம், சாலை துண்டிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலையை தடுக்க அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பகுதிகளில் மாணவர்கள் ஆற்றில் படகுகளில் வந்து தேர்வு எழுதுகிறார்கள். அவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களுக்கு முகக்கவசம்

எக்காரணம் கொண்டும் ஒரு மாணவர் கூட தேர்வு எழுத முடியாத சூழ்நிலை உருவாகக்கூடாது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற காலை 7.30 மணிக்கே தேர்வு மையங்களுக்குள் மாணவர்களை அனுமதிக்க வேண்டும். எல்லை பகுதியில் உள்ள மாணவர்கள் சரியான நேரத்திற்கு தேர்வு மையங்களுக்கு வர தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அனைத்து மாணவர்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை மாணவர்கள் யாராவது மறந்துவிட்டு முகக்கவசம் அணியாமல் வந்தால், அவர்களுக்கு தேர்வு மையங்களில் முகக்கவசங்கள் வழங்க அவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர் திரவத்தை தேர்வு மையங்களுக்கு அனுப்பி இருக்கிறோம்.

உணவு வசதிகள்

சில அமைப்புகள் தேர்வு தினத்தன்று மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்க முன்வந்துள்ளன. இதனால் தனிமனித இடைவெளியை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்படும். அதனால் தேர்வு மையத்திற்கு முன்பு முகக்கவசங்கள் வழங்குவதை போலீசார் அனுமதிக்கக்கூடாது. மாநிலத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள தேர்வு மையங்களுக்கு தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுத வருவார்கள். அவர்கள் எந்த பிரச்சினையும் இன்றி தேர்வு மையங்களுக்கு வந்து செல்ல அந்தந்த மாநிலத்தில் உள்ள மாவட்ட நிர்வாகத்துடன் பேசி, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவைப்பட்டால் அந்த மாணவர்களை விடுதிகளில் தங்கவைத்து உணவு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு தனி அறை ஏற்பாடு செய்து, அதில் அவர்களை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலம் காசர்கோட்டில் இருந்து 367 மாணவர்கள் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுத வருகிறார்கள். அவர்களுக்கு தனி பஸ்சை ஏற்பாடு செய்ய வேண்டும்.

கிருமிநாசினி தெளித்து...

கொரோனா பாதிப்பு இருப்பவர்கள், அரசு முகாம் மற்றும் வீட்டு தனிமையில் இருப்பவர்களின் குழந்தைகளை தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது. அவர்கள் துணைத்தேர்வின்போது, தேர்வு எழுத வசதி செய்து கொடுக்கப்படும். தேர்வு மையத்தை சுற்றிலும் 200 மீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவு அமல்படுத்த வேண்டும். தேர்வு மைய கட்டிடங்களை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்.

200 மாணவர்களுக்கு ஒன்று என்ற வீதத்தில் சுகாதார மையங்களை அமைக்க வேண்டும். 24-ந் தேதி (நாளை) மாதிரி தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வு நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வெளிக்காட்டப்படும். கர்நாடகத்தில் நடைபெறும் இந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நாடே உற்று நோக்குவதால், எந்த பிரச்சினையும் இல்லாமல் தேர்வு நடத்த வேண்டும். இதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உமாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com