டெங்குவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும்

டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் வலியுறுத்தி உள்ளார்.
டெங்குவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும்
Published on

சிப்காட் (ராணிப்பேட்டை),

இந்திய குடியரசு கட்சி சார்பில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். சிற்பி சிவானந்தம் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமிழ்குசேலன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில பொதுச்செயலாளர் தங்கராஜ், மாநில பொருளாளர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி பயிற்சி கட்டண ஊக்கத்தொகையை ரூ.70ஆயிரம் என இருந்ததை ரூ.50ஆயிரமாக குறைத்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும், ராணிப்பேட்டை நகரில் சீனிவாசன் பேட்டை பகுதியில் மலைபோல் குவிந்து கிடக்கும் நகரசபை குப்பைகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜாராமன் நன்றி கூறினார்.

பின்னர் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கூறுகையில், தமிழ்நாடு முதல் அமைச்சரை சந்தித்து மாணவர்களின் கல்வி கட்டணம் தொடர்பாக பேசியுள்ளோம். முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதால் டெங்கு இடர்பாடு மாநிலமாக தமிழகத்தை அறிவித்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை புதிய அணுகுமுறையோடு மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் டெங்கு பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றாலும் நோயாளிகளின் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும். முதல்-அமைச்சராக இருந்தபோதே ஜெயலலிதா மறைந்ததினால் உச்சநீதிமன்றத்தில் பொறுப்பில் இருக்கும் நீதிபதியை கொண்டு ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com