ஆரம்ப கட்டத்தில் சிரமமாக இருந்தாலும் ‘ஜி.எஸ்.டி.’ சட்டம் இன்னும் 3 மாதங்களில் எளிமையாக தெரியும்

ஆரம்ப கட்டத்தில் சிரமமாக இருந்தாலும் ஜி.எஸ்.டி. சட்டம் இன்னும் 3 மாதங்களில் எளிமையாக தெரியும் என்று சேலம் கோட்ட வணிகவரி இணை ஆணையாளர் ரவி தெரிவித்தார்.
ஆரம்ப கட்டத்தில் சிரமமாக இருந்தாலும் ‘ஜி.எஸ்.டி.’ சட்டம் இன்னும் 3 மாதங்களில் எளிமையாக தெரியும்
Published on

சேலம்,

தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை சேலம் வணிகவரி மாவட்டத்தின் சார்பில் வணிகர்களுக்கான ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம்-2017 தொடர்பான பயிலரங்கம் நேற்று சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வணிகவரி துணை ஆணையாளர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் சம்பத் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கோட்ட இணை ஆணையாளர்கள் மா.ரவி (நிர்வாகம்), ஞான குமார் (செயலாக்கம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சேலம் கோட்ட வணிவரித்துறை இணை ஆணையாளர் மா.ரவி பேசியதாவது:-

ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரி ஆரம்ப கட்டத்தில் கொஞ்சம் சிரமமாக தோன்றினாலும் இன்னும் 3 மாத காலத்தில் எளிமையான சட்டம்போல தெரியும். ஆனால், அதே வேளையில் ஒரு சில பொருட்களுக்கு எத்தனை சதவீதம் ஜி.எஸ்.டி. விதிப்பது என்ற சிரமமும், குழப்பமும் பெரும்பாலும் இருக்கத்தான் செய்யும். வணிகர்களுக்கு அதுபோன்ற குழப்பத்தை தீர்க்கத்தான் அனைத்து கிளை வணிகவரி அலுவலகங்களிலும் உதவி சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வணிகர்கள் இந்த உதவி மையங்களுக்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு ஜி.எஸ்.டி. தொடர்பான சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெறலாம்.

ஜி.எஸ்.டி.யை நாம் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டுமானால் பொருட்களின் மீது விற்பனை விலை கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால், அதை செயல்படுத்தவும் சில காலம் ஆகத்தான் செய்யும்.

எனவே, வணிகர்களாகிய உங்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக வணிகவரித்துறை காத்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் துணை ஆணையாளர்கள் கீதா (நாமக்கல்), தீபா (ஈரோடு), உஷா (சேலம்), சேலம் அனைத்து வணிகர் சங்கங்களின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் மற்றும் வணிகர்கள், ஆடிட்டர்கள், தொழில் அதிபர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com