

திருப்பூர்,
அரசு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படித்து கலை, பண்பாடு, அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகள் ஜப்பான் நாட்டுக்கு சென்று அங்குள்ள கல்வி முறைகள் குறித்து அறியும் வகையில் புதிய திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி தேசிய அளவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவர் சதீஷ்கண்ணனும் தேர்வு செய்யப்பட்டார். அவரும், மற்ற மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் 38 பேரும் என்று மொத்தம் 39 பேர் கடந்த 12-ந்தேதி ஜப்பான் நாட்டுக்கு கல்வி சுற்றுலா சென்றனர். அவர்கள் அங்குள்ள அறிவியல் மையம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று அந்த நாட்டின் கல்வி மற்றும் கலாசார முறைகள், பண்பாடு உள்ளிட்டவைகளை தெரிந்து கொண்டு இந்தியா திரும்பினார்கள். அந்த வகையில் சதீஷ்கண்ணன் கடந்த 23-ந்தேதி திருப்பூர் வந்து சேர்ந்தார். பின்னர் அவர் தனது பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர் ராஜாவை சந்தித்து தான் பெற்ற அனுபவங்களை அவருடன் பகிர்ந்துகொண்டார்.
ஜப்பான் சென்று திரும்பியது குறித்து மாணவர் சதீஷ்கண்ணன் கூறியதாவது.
எனது தந்தை சென்ட்ராயர். எனது தாய் செல்வி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நான் வெளிநாட்டுக்கு செல்வேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்த நிலையில் அரசின் இந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. விமானத்தில் ஜப்பான் நாட்டில் சென்று இறங்கிய உடன் அங்குள்ள மக்களையும், கட்டிடங்களையும், கலாசாரங்களையும் வியப்புடன் பார்த்தோம். அனைத்தையும் ரசித்த எங்களுக்கு அங்குள்ள உணவு வகைகளை தான் சாப்பிட முடியவில்லை. அரிசி, நூடுல்ஸ், சமைக்காத பச்சை காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளையே அதிகம் சாப்பிடுகின்றனர்.
இதனால் நாங்கள் நீண்ட தூரம் பயணம் செய்து மிகவும் கஷ்டப்பட்டு ஒரு இந்திய உணவு ஓட்டலை கண்டுபிடித்தோம். அதில் விரும்பிய உணவுகளை சாப்பிட்டோம். பின்னர் அங்கிருந்து ஒரு ரோபோட் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு எங்களை அழைத்து சென்றனர். அங்கு ரோபோட் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன? என்பதை பற்றி தெரிந்துகொண்டோம். அவை தயாரிக்கப்படும் நவீன தொழில் நுட்பங்களும், அவற்றின் செயல்பாடுகளும் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் அங்குள்ள ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்துக்கு சென்று அங்கு செய்யப்படும் ஆராய்ச்சிகள் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி கூறினார்கள். அந்த நாட்டில் மிக பழமை வாய்ந்த கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் பழமை வாய்ந்த புராதன சின்னங்கள் அதிக அளவு உள்ளது. இவற்றை சுற்றிப்பார்க்கவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவற்றை அரசு முறையாக பராமரித்து பாதுகாத்து வருகிறது.
மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்துக்கும், பழைய கார்களை உடைக்கும் ஒரு தொழிற்சாலைக்கும் சென்று அங்கு செய்யப்படும் பணிகளையும் பார்வையிட்டோம். தனியார் பள்ளிக்கு அழைத்து சென்று அங்குள்ள கல்வி முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். அங்கு பின்பற்றப்படும் பாட முறைகள் குறித்து விளக்கி கூறினார்கள். மேலும், அந்த நாட்டின் பெரும்பாலான ஓட்டல்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்பட பல்வேறு இடங்களில் ரோபோக்களின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. அங்குள்ள பொதுமக்கள் அனைவருக்கும் நல்ல மரியாதை கொடுக்கின்றனர். அந்த மரியாதையை நமது நாட்டிலும் கடைபிடித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
மேலும், அங்குள்ளவர்கள் கல்வி அறிவு படைத்தவர்களாக இருந்தாலும் சரி, கல்வி அறிவு இல்லாதவர்களாக இருந்தாலும், அனைத்து துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட அவர்களுடைய தாய் மொழியிலேயே பேசுகின்றனர். ஒருசிலரே ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க முடிந்தது. அங்குள்ள சாலைகள் அனைத்தும் நேர்த்தியாக போடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களை பார்க்க முடியவில்லை. பெரும்பாலும் கார்களிலேயே பயணிக்கின்றனர். அதிலும் சுகாதாரம் என்பதற்கு மிக முக்கியத்துவத்தை அந்த நாட்டு அரசு கொடுத்து வருகிறது. பொது இடங்களில் அசுத்தம் செய்தால் உடனடியாக அபராதம் விதிக்கப்படுகிறது. கடைசி நாளில் நம் நாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி கட்டச்சொன்னார்கள். இதை அங்குள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இந்த பயணத்துக்காக எங்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளார்கள். இந்த பயணம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்ததுடன் இதன் மூலம் பல்வேறு விஷயங்களையும் கற்றுக்கொண்டோம். மேலும், இன்னும் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.