

சென்னை,
ஒரகடத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பஸ் ஒன்று, காஞ்சீபுரம் பெரியார் நகர் பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று திடீரென அந்த பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி பஸ் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை மூட்டம் எழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பஸ்சில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
எனினும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. பஸ்சில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.