

வீட்டுமனை பட்டா
அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என்.ஆர்.வடிவேலு தலைமையில், அறச்சலூர் அருகே உள்ள குள்ளரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பதற்காக நேற்று திரண்டு வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து ரேஷன் கார்டுகளை ஒப்படைக்காமல் தாங்கள் கொண்டுவந்த கோரிக்கை மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
நாங்கள் குள்ளரங்கம்பாளையம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 60 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அனைவரும் தினக்கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களில் 40 குடும்பத்தினருக்கு ஏற்கனவே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்றுவரை மீதமுள்ள 20 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. இட நெருக்கடி காரணமாக காலியாக உள்ள இடத்தில் ஓட்டு வீடு மற்றும் ஓலைக்குடிசை அமைத்து குடியிருந்து வருகிறோம். நாங்கள் பலமுறை வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
மோசடி
திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்திருந்த மனுவில், 'நான் தொழில் நிமித்தமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள காசுக்காரன்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தேன்.
அப்போது எங்கள் வீட்டின் அருகில் வசித்து வந்த பெண் ஒருவர் என்னிடம் கடனாக ரூ.15 லட்சம் கேட்டார். அப்போது என்னிடம் பணம் இல்லாததால் எனக்கு தெரிந்த ஒருவரிடம் ரூ.12 லட்சம் வாங்கி அந்த பெண்ணுக்கு கொடுத்தேன். 4 மாதங்களில் திருப்பி தருவதாக கூறி கடன் பெற்ற அந்த பெண் 2 ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்து வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தரவேண்டும்' என்று கூறி இருந்தார்.