வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு உறவினர்கள் போராட்டம்

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு உறவினர்கள் போராட்டம்
Published on

கோவில்பட்டி,

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே வரகனூரில் அய்யாச்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் பலர் சிக்கினர்.

இதில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த நீதிராஜ் (வயது 50), வரகனூரைச் சேர்ந்த அன்னராஜ் மனைவி கிருஷ்ணம்மாள் (55), மாரியம்மாள் (48), ஏழாயிரம்பண்ணை மேல சத்திரத்தைச் சேர்ந்த ஜெயக்கண்ணன் மனைவி கஸ்தூரி (45) ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருத்தங்கலைச் சேர்ந்த தொழிலாளி பெரியசாமி (46), ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த தமிழ்மாலை மனைவி கருப்பாயி (54) உள்ளிட்ட 11 பேர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மற்றும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெரியசாமி நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வெடி விபத்தில் இறந்த நீதிராஜ், கிருஷ்ணம்மாள், மாரியம்மாள், கஸ்தூரி ஆகிய 4 பேரின் உடல்களும் நேற்று காலையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே, வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில், தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இறுதிச்சடங்கு நடத்துவதற்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, உறவினர்கள் மற்றும் அனைத்து கட்சியினர், இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அரசு அதிகாரிகள், ஆலை நிர்வாகத்தினர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆலை நிர்வாகம் சார்பில், வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், ஈமச்சடங்கு நிதியாக தலா ரூ.25 ஆயிரமும் வழங்க முன்வந்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

மாலையில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா மற்றும் அதிகாரிகள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார். இதையடுத்து இறந்தவர்களின் உடல்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வாகனங்களில் உடல்களை ஏற்றி, சொந்த ஊர்களுக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு நடத்தினர்.

பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

திருவேங்கடம் அருகே வரகனூரில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் மதியம் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த மேலும் சிலர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு, சிவகாசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வரகனூர் கிராம நிர்வாக அலுவலர் செல்லமுருகன் திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், திருவேங்கடம் போலீசார், வெடி மருந்துகளை தவறாக கையாளுதல், சிறிய ரக பட்டாசுகளுக்கு அனுமதி வாங்கிவிட்டு பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்தனர். இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளரான அய்யாச்சாமியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com