

மும்பை,
மும்பையில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கியில் நடந்த ரூ.4 ஆயிரத்து 355 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங், முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ், எச்.டி.ஐ.எல். ரியல் எஸ்டேட் நிறுவன நிர்வாக இயக்குனர்களான ராகேஷ் வாதாவன், அவரது மகன் சாரங் வாதாவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இவர்களில் வர்யம் சிங், ராகேஷ் வாதாவன், சாரங் வாதாவன் ஆகியோரின் போலீஸ் காவல் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.
நேற்று அவர்களது போலீஸ்காவல் முடிந்ததை அடுத்து போலீசார் மூன்று பேரையும் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு அவர்களை வருகிற 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மூவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில், பி.எம்.சி. வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமசின் போலீஸ் காவல் இன்று (வியாழக்கிழமை) முடிகிறது.
இதற்கிடையேநேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பி.எம்.சி. வங்கியின் முன்னாள் இயக்குனர் சுர்ஜித் சிங் அரோராவிடம் முறைகேடு தொடாபாக தீவிர விசாரணை நடத்தினார்கள்.அவருக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதன் மூலம் பி.எம்.சி. வங்கி வழக்கில் தைனவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.