காரைக்காலில் மீன் எண்ணெய்-பவுடருக்காக ஒரே நாளில் 48 ஆயிரம் கிலோ கழிவு மீன்கள் ஏற்றுமதி

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில், மீன் பவுடர், மீன் எண்ணெய் மற்றும் கோழித் தீவனத்திற்காக நேற்று ஒரேநாளில் 48 ஆயிரம் கிலோ மீன் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
காரைக்காலில் மீன் எண்ணெய்-பவுடருக்காக ஒரே நாளில் 48 ஆயிரம் கிலோ கழிவு மீன்கள் ஏற்றுமதி
Published on

காரைக்கால்,

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில், சுமார் 350 விசைப் படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் தினசரி சென்று கடலில் மீன் பிடித்து வருகின்றனர். பெரும்பாலும் பெரிய அளவிலான மீன்கள், இலங்கை கடற்பகுதியில்தான் கிடைத்து வருகிறது. எனவே காரைக்கால் மீனவர்களுக்கு மாதத்தில் ஒரு சில தினங்கள் மட்டுமே பெரிய மற்றும் ஏற்றுமதி தரம்வாய்ந்த மீன்கள் கிடைக்கின்றன.

கடந்த சில நாட்களாக செம்பரா எனும் ஏற்றுமதிவாய்ந்த மீன்கள் கிடைத்தாலும், அதிக அளவு செம்பரா கிடைக்காததால் மீனவர்கள் கவலை தெரிவித்தனர். அதேசமயம், சிறிய அளவிலான மத்தி, கவளை, குத்துவா, பொருவா, மத்தி மற்றும் கடலில் இறந்து மிதக்கும் மீன் கழிவுகளை அதிக அளவு மீனவர்கள் கரைக்கு கொண்டு வருகின்றனர். இதில் ஒன்றுக்கும் உதவாத மீன்களை 50 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.350-க்கு, அப்படியே ஏற்றுமதி செய்து கோழித்தீவனத்திற்கு அனுப்பிவிடுகின்றனர்.

கிலோ கழிவுமீன்கள் ஏற்றுமதி

மேலும் ஓரளவுக்கு நல்ல மீன்களை, 50 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.800 முதல் ரூ.1000-க்கு ஏலம் விட்டு, துறைமுகத்தில் ஐஸ்போட்டு சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் பகுதிக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அங்கு மீன்களை பவுடர் மற்றும் எண்ணெய்களாக மாற்றி சென்னைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னைக்கு அனுப்பப்படும் மீன் பவுடர் மற்றும் எண்ணெய் சுத்தம் மற்றும் பாடம் செய்யப்பட்ட, உணவு மற்றும் மருத்துவப்பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒரே நாளில் 48 ஆயிரம் கிலோ கழிவு மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், சாதாரணமாக மீன் கழிவுகள் அப்படியே ஏற்றி கோழித்தீவனத்திற்கு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், மீன் பவுடர் மற்றும் எண்ணெய்க்கு மீன்களை அப்படி அனுப்ப இயலாது. குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் வரை மீன்கள் ஈரப்பதத்துடன் இருக்கவேண்டும். அதனால், ஐஸ்போட்டு மிக பாதுகாப்பாக கொண்டுசெல்கிறோம். தற்போது ஓரளவுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com