செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலை காரைக்காலில் இருந்து இயக்க வேண்டும்

மன்னார்குடி-கோயம்புத்தூர் இடையேயான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலை காரைக்காலில் இருந்து இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் காரைக்கால் வர்த்தகர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலை காரைக்காலில் இருந்து இயக்க வேண்டும்
Published on

காரைக்கால்,

காரைக்கால் வந்த தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்செரஸ்தாவை காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள், அதன் தலைவர் ஆனந்தன் தலைமையில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூருக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. தொழில் நகரமான கோயம்புத்தூர் மற்றும் கேரளாவிற்கு காரைக்காலில் இருந்து ஏராளமானோர் சென்று வருகின்றனர். எனவே மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலை காரைக்காலில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி மற்றும் மங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதிகளில் ஒன்றான மாகேவை சேர்ந்த ஏராளமானோர் காரைக்காலில் பணியாற்றி வருகின்றனர். அதுபோன்று மாணவ-மாணவிகளும் இங்குள்ள கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர். எனவே அவர்களின் வசதிக்காக புதுச்சேரியில் இருந்து செல்லும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களை திருச்சியில் பிடித்து ஏறும் வகையில் காரைக்காலில் இருந்து திருச்சிக்கு இணைப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில் மற்றும் நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு செய்யப்படும் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அரசு, தனியார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக காரைக்காலில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ஒரு ரெயிலை இயக்க வேண்டும்.

நாகூரில் இருந்து கொல்லத்திற்கு முன்பு மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த ரெயில் இடையில் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே காரைக்காலில் இருந்து-கொல்லத்திற்கு மீண்டும் ரெயில் சேவையை தொடங்க வேண்டும். சரக்குகளை ஏற்றுமதி-இறக்குமதி செய்யும் வகையில் காரைக்கால் ரெயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த சந்திப்பின்போது சங்க செயலாளர் சிவகணேஷ், முன்னாள் தலைவர்கள் மகாவீர்சந்த், சாந்தகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com