மும்பையில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் மராட்டிய கலாசாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் ராஜ் தாக்கரே பேச்சு

மும்பையில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் மராட்டிய கலாசாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என ராஜ் தாக்கரே பேசி உள்ளார்.
மும்பையில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் மராட்டிய கலாசாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் ராஜ் தாக்கரே பேச்சு
Published on

மும்பை,

மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியினர் வெளிமாநிலத்தவரை தாக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே அந்த கட்சி வெளிமாநிலத்தவருக்கு எதிரானது போன்ற எண்ணம் மக்களிடையே நிலவி வருகிறது. இந்தநிலையில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே இந்த பிரச்சினை குறித்து வடமாநிலத்தவர்கள் முன்னிலையில் பேசும் நிகழ்ச்சி மும்பை காந்திவிலியில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றொரு மாநிலத்திற்கு சென்று வேலை செய்யும் போது பிரச்சினை ஏற்படத்தான் செய்யும். மும்பையில் மட்டும் இது நடக்கவில்லை. எல்லா மாநிலத்திலும், வெளிநாடுகளிலும்கூட நடக்கிறது.

இதுவரை இந்தியாவில் அதிகமுறை உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் தான் பிரதமர்களாக இருந்துள்ளனர். அப்போது அங்கு வேலை வாய்ப்பை பெருக்க நீங்கள் ஏன் அவர்களிடம் கேட்கவில்லை. மும்பையில் வேலை வாய்ப்பு உள்ளது போல ஏன் உங்கள் மாநிலத்தில் இல்லை. ஒருவேளை நீங்கள் மும்பை வந்தால் அதுகுறித்த விவரங்களை போலீஸ்நிலையத்தில் தெரிவியுங்கள். அப்போது எந்த பிரச்சினையும் வராது.

மும்பையில் நடைபெறும் அதிக குற்றச்செயல்களில் வடமாநிலத்தவர் தான் ஈடுபடுகின்றனர். அவர்கள் இங்கு குற்றத்தை செய்துவிட்டு சொந்த ஊருக்கு தப்பிவிடுகின்றனர்.

அதேபோல மும்பையில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் மராட்டிய மொழியையும், கலாசாரத்தையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மராட்டியையும், மராட்டியத்தின் கலாசாரத்தையும் பாதுகாப்பது எனது கடமை. இந்தி நல்ல மொழி. ஆனால் தேசிய மொழி என அதை கூறுவது தவறு. நாட்டில் பல்வேறு மொழிகள் உள்ளன. ஒவ்வொறு மொழியும், அதன் கலாசாரமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

1960-களில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து அதிகளவு மக்கள் வேலை வாய்ப்பு தேடி மும்பை வந்தனர். தற்போது அவர்கள் வருவதில்லை. அவர்களது மாநிலத்திலேயே வேலை வாய்ப்பு வந்துவிட்டது. இதுபோல உங்கள் மாநிலத்திலும் வேலை வாய்ப்பை அதிகரிக்க உங்கள் மாநில அரசை, மத்திய அரசை வலியுறுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com