கிருஷ்ணகிரி ராணுவ கேண்டீனில் டோக்கன் பெற வரிசையில் நின்ற முன்னாள் படைவீரர்கள்

கிருஷ்ணகிரியில் உள்ள ராணுவ கேண்டீனில் முன்னாள் படைவீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதைபெற அவர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
கிருஷ்ணகிரி ராணுவ கேண்டீனில் டோக்கன் பெற வரிசையில் நின்ற முன்னாள் படைவீரர்கள்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா அருகில் பெங்களூரு சாலையில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் சலுகை விலையில் பொருட்கள் பெறுவதற்கான கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்துள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை சலுகை விலையில் பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரியில் உள்ள கேண்டீன் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி முதல் கேண்டீன் திறக்கப்பட்டு, பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பொருட்களை வாங்க கேண்டீன் முன்பு குவியத் தொடங்கினார்கள்.

டோக்கன் வழங்கப்பட்டது

இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த கேண்டீன் நிர்வாகம் நாள் ஒன்றுக்கு 150 பேருக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும், அந்த டோக்கன் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள மண்டபத்தில் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏராளமானவர்கள் அந்த மண்டபம் முன்பு கூடினார்கள்.

இதையடுத்து டோக்கன் வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாகவும், கேண்டீன் பூட்டப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். இந்த நிலையில் நேற்று முதல் பொருட்கள் வாங்குவதற்காக முன்னாள் ராணுவ வீரர்கள், அவரது குடும்பத்திற்கு டோக்கன் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் உள்ள முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் டோக்கன் பெறுவதற்காக ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் பொருட்கள் டோக்கன் முறையில் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com