புலியூர்குறிச்சியில் 6–வது நாளாக சத்தியாகிரகம் நீடிப்பு

ஒகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் நேற்று 6–வது நாளாக சத்தியாகிரக போராட்டம் நீடித்தது. போராட்டத்தை அரசியல் கட்சியினர் தலைமை ஏற்று நடத்த முடிவு செய்துள்ளனர்.
புலியூர்குறிச்சியில் 6–வது நாளாக சத்தியாகிரகம் நீடிப்பு
Published on

தக்கலை,

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்யவேண்டும், குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் கடந்த 2ந் தேதி முதல் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் தொடர் சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதில் தி.மு.க. உள்பட பல அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் இரவு பகலாக போராட்டத்தில் பங்கேற்று வந்தார். மேலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில தலைவர் என்.ஆர். தனபாலன் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்த போராட்டம் தொடர்பாக அரசியல் கட்சியினர் கூட்டம் நடந்தது. அதில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அரசியல் கட்சியினர் தலைமை ஏற்று போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, நேற்று 6வது நாளாக நடந்த போராட்டத்தில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கி பேசினார். இதில் விவசாய அமைப்புகள், அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து குமரி மாவட்ட நீர்ப்பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறியதாவது:

விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். 8ந் தேதி (இன்று) நடைபெறும் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொள்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com