பயிர்க்காப்பீட்டு தொகை கிடைக்காததால் ஆத்திரம்: தனியார் வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

கும்பகோணத்தில் பயிர்க்காப்பீட்டு தொகை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தனியார் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பயிர்க்காப்பீட்டு தொகை கிடைக்காததால் ஆத்திரம்: தனியார் வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
Published on

கும்பகோணம்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், ஆலங்குடி, மாத்தூர், பூந்தோட்டம், தென்குவளைவேலி, திருவோணமங்கலம், அமராவதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 235 விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் பட்டாவை கும்பகோணம் லெட்சுமிவிலாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடமானம் வைத்து பயிர்க்கடன் பெற்றனர்.

இவர்கள் பயிர்க்கடன் பெற்றதோடு அதே வங்கியில் பயிர் காப்பீட்டுக்கான பிரீமிய தொகையையும் செலுத்தி வந்தனர். இந்த தொகையை வங்கி நிர்வாகம் திருவாரூர் மாவட்டத்துக்கு என ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தாமல், தவறுதலாக தஞ்சை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மற்றொரு நிறுவனத்தில் செலுத்தியதாக தெரிகிறது. இதனால் மத்திய அரசு அறிவித்த பயிர்க்காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த வலங்கைமான், ஆலங்குடி, மாத்தூர், பூந்தோட்டம், தென்குவளைவேலி, திருவோணமங்கலம், அமராவதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், நேற்று கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கும்கோணம் தாசில்தார் வெங்கடாசலம், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும், வங்கி அதிகாரிகளையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகளின் திடீர் போராட்டம் காரணமாக கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com