நீலகிரி கலெக்டர் பெயரில் போலி மின்னஞ்சல் மூலம் குறுஞ்செய்தி: அரசு அலுவலர்களுக்கு அனுப்பியவர் யார்? போலீஸ் தீவிர விசாரணை

‘ஆன்லைன் வர்த்தக பரிசு கார்டு பெற இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என்று நீலகிரி கலெக்டர் பெயரில் போலி மின்னஞ்சல் மூலம் அரசு அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி கலெக்டர் பெயரில் போலி மின்னஞ்சல் மூலம் குறுஞ்செய்தி: அரசு அலுவலர்களுக்கு அனுப்பியவர் யார்? போலீஸ் தீவிர விசாரணை
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது பெயரில் போலியான மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டு, அதன் மூலம் ஆன்லைன் வர்த்தக பரிசு கார்டு பெற இந்த இணைப்பை கிளிக் செய்யவும் என்று நீலகிரி மாவட்டம் உள்பட சில மாவட்ட அரசு அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் என்னை தொடர்புகொண்டு கேட்டபோதுதான் எனக்கு தெரியவந்தது. மேலும் சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இது முழுக்க முழுக்க பொய்யானது ஆகும். போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கியது கண்டறியப்பட்ட உடன் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் மூலம் வர்த்தக பரிசு கார்டு ஆர்டர் செய்து, மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். எத்தனை பரிசு கார்டுகள், எவ்வளவு மதிப்பில் வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும் என்று திரும்ப திரும்ப மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. அந்த மின்னஞ்சலில் நீலகிரி மாவட்ட மாஜிஸ்திரேட், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. எனது அலுவலக மின்னஞ்சல் collrnlg@gmail.com இதுதான். எனவே போலியான மின்னஞ்சல் மூலம் நான்(அதாவது கலெக்டர்) அனுப்புவதை போல அனுப்பப்படும் மின்னஞ்சலில் அமேசான் பரிசு கார்டு லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அதை திறந்து பார்க்கவும் வேண்டாம். இந்த தவறான செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறும்போது, கலெக்டர் பெயரில் தொடங்கப்பட்ட போலியாக மின்னஞ்சலில் இருந்து குறுஞ்செய்தி எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்த ஐ.பி. முகவரி தேடப்பட்டு வருகிறது. இந்த முகவரி கண்டறியப்பட்ட உடன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன்களில் ஹைபர்லிங்க், கியூ.ஆர். கோர்டை சிலர் அனுப்பி மற்றவர்களின் செல்போன்களில் உள்ள தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com