

கார் மீது மோதல்
சென்னை விருகம்பாக்கம், காமராஜர் சாலையை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரவாயல் அருகே உள்ள நூம்பல் பகுதி வழியாக காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது கார் மீது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் தன்னிடம் தகராறு செய்வதாக மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் சுபாஷ் புகார் செய்தார். அப்போது அவர், தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறியதுடன், சென்னை தலைமை செயலகத்தில் இணை செயலாளராக இருப்பதாகவும் கூறினார்.
உடனடியாக போலீசார், அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து தகராறு செய்ததாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி
முன்னதாக போலீசாரிடம் சுபாஷ், ஐ.ஏ.எஸ். என அச்சிடப்பட்ட தனது விசிட்டிங் கார்டையும் கொடுத்து சென்றார். அந்த விசிட்டிங் கார்டை பார்த்த போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதில் ஊரக வளர்ச்சி துறை இணை செயலாளர் என அச்சிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் சுபாஷ் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது தெரிந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில் சுபாஷ் மதுரவாயல் போலீஸ் நிலையம் வந்தபோது போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது உறுதியானது.
வாலிபர் கைது
சுபாஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி அரசு அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீஸ் நிலையங்களில் செல்போன் மூலம் அதிகார தோரணையில் பேசி, தனக்கு தெரிந்தவர்களுக்கு பல்வேறு பணிகளை செய்து கொடுத்ததும் தெரிந்தது.
மேலும் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சுபாஷிடம் இருந்து ஐ.ஏ.எஸ். என அச்சடித்து வைத்திருந்த போலி விசிட்டிங் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.