போலி பாஸ்போர்ட் தயாரித்த 11 பேர் கைது பரபரப்பு தகவல்கள்

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த டிராவல்ஸ் அதிபர் உள்பட 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
போலி பாஸ்போர்ட் தயாரித்த 11 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
Published on

சென்னை,

சென்னையில் பெரிய அளவில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் ஒன்று நெட்வொர்க் அமைத்து செயல்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் போலி பாஸ்போர்ட் கும்பல் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. அங்கு நடத்திய சோதனையில் 80 இந்திய போலி பாஸ்போர்ட்களும், 12 இலங்கை போலி பாஸ்போர்ட்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும் போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படுத்திய லேப்டாப், ஸ்கேனிங் மெஷின், பிரிண்டர் உள்ளிட்ட கருவிகளையும், போலி முத்திரைகள் உள்ளிட்டவைகளையும் போலீசார் கைப்பற்றினர். போலி இந்திய விசாவும், ரூ.85 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் ஈடுபட்டதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

சென்னை பெருங்குடியை சேர்ந்த வீரகுமார் (வயது 47), அவரது தம்பி எழும்பூரை சேர்ந்த பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (45), செனாய்நகரை சேர்ந்த கார்த்திகேயன் (40), செங்குன்றத்தை சேர்ந்த சரவணன் (43), கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (50), அமைந்தகரையை சேர்ந்த உமர் உசேன் (47), சூளைமேடு நெடுஞ்சாலையை சேர்ந்த அம்ஜத்குமார் (36), தியாகராயநகர் கிரியப்பா சாலையை சேர்ந்த சக்திவேலு (47), கோடம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (40), சாலிகிராமத்தை சேர்ந்த குணாளன் (48), அய்யப்பன்தாங்கலை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (47).

டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரகுமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர். அந்த கட்சி சார்பில் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தான் போலி பாஸ்போர்ட் கும்பலின் தலைவனாக செயல்பட்டு உள்ளார்.

பழைய பாஸ்போர்ட்களை வாங்கி அதில் உள்ள புகைப்படத்தை நீக்கிவிட்டு, புதிதாக பாஸ்போர்ட் கேட்பவரின் புகைப்படத்தை அதில் ஒட்டி, போலி பாஸ்போர்ட்டை தயாரித்து உள்ளனர். இவர்களுக்கு உதவியாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு விமான நிலைய ஊழியர்களும் செயல்பட்டு உள்ளனர்.

சென்னையில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, இவர்கள் போலி பாஸ்போர்ட்களை தயாரித்து கொடுத்து உள்ளனர். ஒரு பாஸ்போர்ட்க்கு ரூ.5 லட்சம் வரை வாங்கியுள்ளனர். இவர்களை பற்றி தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com