குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி விதவை பெண்ணிடம் ரூ.27 கோடி, 3 கிலோ தங்கம் மோசடி போலி சாமியார் கைது

விதவை பெண்ணிடம் குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி ரூ.27 கோடி மற்றும் 3 கிலோ தங்கத்தை மோசடி செய்த போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி விதவை பெண்ணிடம் ரூ.27 கோடி, 3 கிலோ தங்கம் மோசடி போலி சாமியார் கைது
Published on

பெங்களூரு,

பெங்களூரு ராமமூர்த்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் கீதா. இவர் ராமமூர்த்தி நகர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் கணவர் உடல்நலக்குறைவால் கடந்த 2009-ம் ஆண்டு இறந்து விட்டார். நான் எனது 3 மகன்களுடன் ராமமூர்த்தி நகரில் தனியாக வசித்து வருகிறேன். எனக்கு பெங்களூருவில் 7 இடங்களில் நிலங்கள் இருந்தன. மேலும் கோலார் மாவட்டத்திலும் சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளது.

சொத்து தகராறு

இந்த நிலையில் எனக்கும், என்னுடைய உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் நாகராஜ் என்பவர் எனக்கு அறிமுகமானார். எனது வீட்டிற்கு வந்த அவர், தான் ஓரு சாமியார் எனவும், உங்கள் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள் அனைத்தையும் நான் அறிவேன்.

அதை தீர்த்துவைக்க தங்கள் வீட்டில் பூஜை ஒன்று நடத்த வேண்டும் எனவும் கூறினார். பூஜையில் வீட்டில் உள்ள தங்க நகைகளை வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

3 கிலோ தங்க நகைகள் - ரூ.27 கோடி

பின்னர் அவர் எனது வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பல பூஜைகளை நடத்தினார். அப்போது பூஜையில் நான் எனது தங்க நகைகளை வைத்தேன். இவ்வாறாக நான் இதுவரை 3 கிலோ தங்க நகைகளை வைத்துள்ளேன். அந்த நகைகளை அவர் எடுத்துக் கொண்டார்.

மேலும் பூஜை செலவிற்காக ரூ.5 கோடி வரை என்னிடம் அவர் வாங்கி உள்ளார். பின்னர் அவர் பூஜைக்காக என்னிடம் வாங்கிய தங்க நகைகளை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதையடுத்து எனக்கு சொந்தமான சில நிலங்களை விற்று வேறு இடத்தில் நிலம் வாங்கினால் குடும்ப பிரச்சினை தீரும் என கூறினார். அதை நம்பி பெங்களூருவில் உள்ள நிலங்களை விற்று ரூ.22 கோடியை அவரிடம் கொடுத்தேன். ஆனாலும் குடும்ப பிரச்சினை தீரவில்லை.

போலி சாமியார் கைது

இதனால் சந்தேகம் அடைந்து நாகராஜிடம் நான் கொடுத்த பணம், தங்க நகைகளை திரும்ப கேட்டேன். அதற்கு அவர் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டார். மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, என் மகன்கள் மீது பேய்களை ஏவி விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதனால் அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியார் நாகராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com