

பெங்களூரு:
தமிழக வாலிபர் கொலை
பெங்களூரு ஜே.ஜே.நகர் அருகே கோரி பாளையாவில் கடந்த 4-ந் தேதி தமிழகத்தை சேர்ந்தவரான சந்துரு குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஜே.ஜே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் சாகித் மற்றும் சாகித் மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்திருந்தார்கள். இந்த நிலையில், உருது மொழி பேச தெரியாததால் தான் சந்துரு கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, பா.ஜனதா பொதுச் செயலாளர் ரவிக்குமார் கூறினார்கள்.
ஆனால் மோட்டார் சைக்கிள் மோதிய விவகாரத்தில் தான் சந்துரு கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்தார். இதையடுத்து, இந்த கொலை வழக்கு சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்படி, சி.ஐ.டி. போலீசார் தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர்.
நண்பரிடம் சி.ஐ.டி. விசாரணை
இந்த நிலையில், செலுவாதிபாளையாவில் உள்ள சந்துருவின் வீட்டுக்கு சி.ஐ.டி. போலீசார் சென்றார்கள். அங்கிருந்த சந்துருவின் பாட்டி மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர். சந்துரு என்ன படித்திருந்தார், வேலைக்கு சென்றாரா? உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் வீட்டில் இருந்த சந்துரு சம்பந்தப்பட்ட சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றார்கள்.
மேலும் சந்துருவை கொலை செய்தபோது, அவருடன் சென்ற நண்பரான சைமன் ராஜிடமும் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். கொலையாளிகள் 2 பேரும் உருது மொழி பேசும்படி கூறினார்களா? அந்த சந்தர்ப்பத்தில் கொலையாளிகள் என்ன பேசினார்கள்? உள்ளிட்டவை குறித்து சைமன்ராஜிடம் கேட்டு அறிந்து கொண்டனர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகவேண்டும் என்றும் சைமன்ராஜிடம் சி.ஐ.டி.போலீசார் தெரிவித்துள்ளனர்.