குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் ரேஷன் கார்டுக்கு பொருட்கள் வழங்க நடவடிக்கை

குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ரேஷன் கார்டுக்கு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் ரேஷன் கார்டுக்கு பொருட்கள் வழங்க நடவடிக்கை
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறை குறித்து நடந்த விவாதம் வருமாறு:-

அசோக்ஆனந்த் எம்.எல்.ஏ. (என்.ஆர்.காங்.):- எனது தொகுதியில் 3 ஆயிரம் சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் தான் உள்ளன. ஒரு சில தொகுதியில் 10 ஆயிரம் சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் உள்ளன. இதுதொடர்பாக அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சபாநாயகர் வைத்திலிங்கம்:- ஒரு ரேஷன் கார்டுக்கு 10 கிலோ, 20 கிலோ என்று அரிசி வழங்குகிறோம். எத்தனை பேர் உள்ளனரோ அதற்கேற்ப பொருட்கள் கொடுத்தால் பிரச்சினை வராது. நாம் ரேஷன் கார்டு வீதம் பொருட்களை கொடுக்கிறோம். இதனால் ஒரு குடும்பத்தில் 3 பேர் இருந்தாலும், ஒரு கார்டை இரண்டாக பிரித்து விடுகின்றனர்.

அமைச்சர் கந்தசாமி (குடிமைப்பொருள் வழங்கல்துறை):- ஒரு நபர் உள்ள அட்டைதாரர்கள் கூட 20 கிலோ அரிசி வாங்கிச் செல்கின்றனர்.

சபாநாயகர் வைத்திலிங்கம்:- அதனால் தான் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பொருட்கள் வழங்குங்கள் என்கிறேன். ரேஷன் கார்டு மூலம் ஒரு வீட்டிற்கு 2 இலவச பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் பலர் ரேஷன் கார்டை பிரித்து வருகின்றனர்.

அன்பழகன் எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.):- மத்திய அரசு இலவச அரிசிக்கு தரும் பணத்தை ஒரு ரேஷன் கார்டுக்கு என்று வழங்கவில்லை. ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தான் வழங்குகிறது.

அமைச்சர் கந்தசாமி:- ரேஷன் கார்டு தொடர்பாக ஆய்வு செய்யப்போனால், சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ:- நீங்கள் எந்தவித ஆய்வும் செய்யாமலேயே ஆட்சிக்கு வந்த முதல் 6 மாதத்தில் 12 ஆயிரம் சிவப்பு நிற ரேஷன் கார்டு கொடுத்து இருக்கிறீர்கள்.

அமைச்சர் கந்தசாமி:- இந்த பிரச்சினையை தீர்க்க குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ரேஷன் கார்டுக்கு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com