சாலை ஓரம் வாகனம் நிறுத்த கட்டணம் வசூல்: ஊழியர்கள்-பொதுமக்கள் இடையே தகராறு

நாகர்கோவிலில் சாலை ஓரம் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
சாலை ஓரம் வாகனம் நிறுத்த கட்டணம் வசூல்: ஊழியர்கள்-பொதுமக்கள் இடையே தகராறு
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரில் வேப்பமூடு சந்திப்பு, கோர்ட்டு ரோடு மற்றும் பூங்கா முன்புறம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்த அதிரடியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10-ம் (2 மணி நேரம் மட்டும்), 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.40-ம் வசூல் செய்யப்படுகிறது. கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் கட்டணம் வசூல் செய்யும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வியாபாரிகள் மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து கட்டணம் வசூலிக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று வேப்பமூடு பூங்கா முன் வாகனம் நிறுத்திய பொதுமக்களுக்கும், கட்டணம் வசூல் செய்யும் ஊழியர்களுக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. அதாவது கட்டணம் வசூல் செய்யும் உரிமம் பெற்ற தனியார் சார்பில் அங்கு ஏராளமான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். வாகனங்கள் நிறுத்தும் அனைவரிடமும் அவர்கள் கட்டணம் வசூலித்தனர். அப்போது அவர்கள் மிரட்டி பணம் கேட்டதாகவும், இதன் காரணமாக ஊழியர்களுக்கும், மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வை சேர்ந்த சிலரும் பேசியதாக தெரிகிறது.

இதுபற்றி பொதுமக்களிடம் கேட்டபோது, பொதுவாக கடைக்கு டீ குடிக்கவோ, பொருட்கள் வாங்கவோ வருபவர்கள் தங்களது வாகனங்களை சம்பந்தப்பட்ட கடைகளுக்கு முன்போ அல்லது சாலையின் ஓரத்திலோ நிறுத்துவது தான் வழக்கம். இதனால் போக்குவரத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. ஆனால் தற்போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதாக கூறி, இவ்வாறு கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாகர்கோவில் நகரில் முக்கியமான இடங்களில் கூட வாகன நிறுத்தங்கள் கிடையாது. அப்படி இருக்க பொதுமக்கள் தங்களது வாகனங்களை எங்கே நிறுத்துவார்கள்?. இதற்கு பதிலாக போக்குவரத்து நெரிசலை குறைக்க மக்கள் வாகனம் ஓட்டக் கூடாது என்று உத்தரவு போட்டு விடலாம் என ஆவேசத்துடன் கூறினார்கள். இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அங்கு வந்து சமரசம் பேசி பிரச்சினையை முடித்து வைத்தனர்.

சாலை ஓரம் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் முறைக்கு கடும் எதிர்ப்பு வலுப்பதால், இந்த முறையை கைவிடலாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com