சிமெண்டு ஆலையில் வேலை கொடுக்கவில்லை என்றால் தீக்குளிப்போம் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயி கதறல்

ஆனந்தவாடி கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றால் தீக்குளிப்போம் என்று கருத்துகேட்பு கூட்டத்தில் விவசாயி கதறி அழுதார்.
சிமெண்டு ஆலையில் வேலை கொடுக்கவில்லை என்றால் தீக்குளிப்போம் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயி கதறல்
Published on

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தில் அரசு சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. அதன்அருகில் 100 எக்டேர் பரப்பளவில் சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் திடீரென எழுந்து சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம். சுரங்கம் வெட்டினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், கிராம சாலை குறுகியதாக உள்ளதால் லாரிகள் செல்லும் போது நடந்து செல்பவர்கள் ஒதுங்க கூட இடம் இல்லை என குமுறினர். அவர்களை போலீசார் சமரசம் செய்து உட்கார வைத்தனர்.

தீக்குளிப்போம்

அதனைத்தொடர்ந்து பேசிய விவசாயி நல்லத்தம்பி, சிமெண்டு ஆலைகளால் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டு இருக்கிறோம். எங்களிடம் இருந்த விவசாய நிலங்களை வைத்து பிழைப்பு நடத்தி கொண்டு இருந்தோம். அதனை சிமெண்டு ஆலைகள் பிடுங்கி கொண்டன. அதற்காக கொடுக்கப்பட்ட பணத்தை வாங்க மறுத்ததால் கூட்டுறவு வங்கிகளில் செலுத்தினார்கள். அவற்றையும் வாங்கிய கடனுக்காக எடுத்து கொண்டு விட்டனர்.இதனால் நாங்கள் பிழைக்க வழியின்றி வெளிமாவட்டங்களுக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களது காலம் போய், எங்களது பிள்ளைகள் இந்த மண்ணில் வாழ முடியுமா என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். நல்ல சாலை இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை. சிமெண்டு ஆலையில் வேலை தருகிறோம் என்றனர். ஆனால், எந்த வேலைவாய்ப்பும் தரவில்லை. எனவே நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உடனடியாக வேலை தரவேண்டும். இல்லை என்றால் அனைவரும் தீக்குளிப்போம் என்று கதறி அழுதார்.

இளைஞர்களும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்கள். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சோலார் மின் உற்பத்தி நிலையங்கள்

அதனைத்தொடர்ந்து பேசிய சமூக ஆர்வலர் ராஜராஜன் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செய்தது போல அரியலூர் மாவட்டத்தில் உள்ள கைவிடப்பட்ட சுரங்கங்களை மூடி காடுகளாகவும், நீர்த்தேக்கமாக மாற்ற வேண்டும், சோலார் மின் உற்பத்தி நிலையங்களாக ஆக்கவேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com